பட்டமளிப்பு விழா என்பது பலருக்கும் பெரிய கனவு. தங்களின் கடின உழைப்புக்கான பலனாக அந்த ஒற்றைச் சான்றிதழை கையில் வாங்கும் தருணம் வாழ்நாளில் மறக்க முடியாதது. துரதிர்ஷ்டவசமாக சிலருக்கு தவிர்க்கமுடியாத சூழல்களால் பட்டமளிப்பு நாளில் சான்றிதழைப் பெற முடியாமல் போகக்கூடும். அப்படி பட்டமளிப்பு விழாவைத் தவறவிட்ட ஒரு பெண்ணுக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழக நிர்வாகமே நேரில் சென்று பட்டம் வழங்கி உள்ள சம்பவம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அமெரிக்க நாட்டின் லூசியானாவில் உள்ள டில்லார்டு பல்கலைகழகத்தில் (Dillard University) பட்டமளிப்பு விழா மே 14-ம் தேதி சனிக்கிழமை அன்று நடந்தது. அந்தப் பல்கலைக்கழகத்தில் பயின்ற ஜடா சைல்ஸ் எனும் பெண் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பட்டம்பெற வேண்டியவர்.
Jada went into labor on Friday evening. Texted me around 4:30 am Saturday saying she was being admitted, & the baby was born on her graduation day, May 14th. So we rolled up to the hospital so I could finish my tenure in the most special way. #myDU pic.twitter.com/JieETrXVgy
— Walter M. Kimbrough (@HipHopPrez) May 15, 2022
ஆனால், நிறைமாத கர்ப்பிணியான ஜடா சைல்ஸுக்கு வெள்ளிக்கிழமை மாலையே பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு குழந்தை பிறந்துள்ளது. சனிக்கிழமை காலை 4.30 மணிக்கு பல்கலைக்கழகத்தின் தலைவர் வால்டர் எம் கிம்ப்ரோவிடம் பட்டமளிப்பு விழாவின் நாளில் தனக்கு குழந்தை பிறந்துள்ள செய்தியைத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, கிம்ப்ரோ மருத்துவமனைக்கே நேரில் சென்று ஜடாவுக்கு பட்டமளிப்புச் சான்றிதழை வழங்கியுள்ளார். இதனை சற்றும் எதிர்பார்க்காத ஜடா பெருமகிழ்ச்சியடைந்தார். பட்டமளிப்பு உடையில், தன்னுடைய சான்றிதழை ஜடா மகிழ்ச்சியோடு வாங்கிக்கொள்ளும் வீடியோவை, கிம்ப்ரோ மே 16-ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர, அந்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த பலரும் பல்கலைக்கழக தலைவர் கிம்ப்ரோவுக்கும், ஜடாவுக்கும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
from International https://ift.tt/QOnTdh4
via
