பா.ஜ.க தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்றுவரும் மணிப்பூரில் பழங்குடி சமூகமான குக்கி சமூகத்தினருக்கும், மாநிலத்தில் பெரும்பான்மையாக இருக்கும் மைதேயி சமூகத்தினருக்கும் இடையே இரண்டு மாதங்களுக்கு மேலாக நீடித்துவரும் வன்முறையைக் கட்டுப்படுத்த முடியாமல், இரட்டை இன்ஜின் பா.ஜ.க அரசு திணறி வருகிறது. கலவரத்தைக் கட்டுப்படுத்த பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்ட பிறகும் கூட கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகத் தெரியவில்லை.
அதற்கேற்றாற் போலவே மணிப்பூரில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட அடுத்த நாளே இம்பால் மேற்கு மாவட்டத்தில் ஆசிரியை ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இதுவரையில் மொத்தம் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த கலவரத்தில் உயிரிழந்திருக்கின்றனர். இந்த நிலையில் இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் எரிக் கார்செட்டி (Eric Garcetti), ``மணிப்பூர் கலவரம் தொடர்பாக இந்தியா உதவி கேட்டால் எந்த வகையிலும் நாங்கள் உதவத் தயார்" எனத் தெரிவித்திருக்கிறார்.
கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மணிப்பூர் கலவரம் தொடர்பாகப் பேசிய எரிக் கார்செட்டி, ``மணிப்பூரில் அமைதி நிலவ நாங்கள் பிரார்த்திக்கிறோம். அமெரிக்காவுக்கு இதில் என்ன அக்கறை என்று நீங்கள் கேட்கலாம்... இது சக மனிதர்கள் மீதான அக்கறை. மணிப்பூர் வன்முறையில் குழந்தைகள் உட்பட பலர் இறப்பதைப் பார்த்து கவலைகொள்வதற்கு நீங்கள் இந்தியராக இருக்கவேண்டிய அவசியமில்லை. பல்வேறு நல்ல விஷயங்களுக்கு அமைதியே முன்னோடி என்பதை நாங்கள் அறிவோம்.
வடகிழக்கிலும் பல்வேறு நல்ல விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், அமைதியில்லாமல் அத்தகைய நல்ல விஷயங்களைத் தொடர முடியாது. எனவே இந்தியா கேட்டால் எந்த வகையிலும் நாங்கள் உதவி செய்யத் தயார். இது இந்திய விவகாரம் என்று தெரியும். இருப்பினும் இங்கு அமைதி நிலவ பிரார்த்திக்கிறோம். கூடிய விரைவில் நல்லது நடக்கட்டும். அமைதி நிலவும் பட்சத்தில், இங்கு அதிக திட்டங்கள், அதிக முதலீடுகள் ஆகியவற்றைக் கொண்டுவர முடியும். இறுதியாக தெளிவாக ஒரு விஷயத்தை நான் சொல்லிக் கொள்கிறேன், இந்தியாவின் கிழக்கும், வட கிழக்கும் அமெரிக்காவுக்கு மிக முக்கியமானது. அதன் மக்கள், இடங்கள், திறன், எதிர்காலம் ஆகியவை எங்களுக்கு முக்கியம்" என்றார்.
from International https://ift.tt/MjL2Vhy
via
