சீனாவைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை ஜெங் கின்வென் (Zheng Qinwen) பிரெஞ்சு ஓப்பன் போட்டியில் கடுமையான வயிற்றுவலியால் பாதிக்கப்பட்டதால் போட்டியை இழக்க நேர்ந்தது. போலந்து நாட்டைச் சேர்ந்த நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்விடெக் (Iga Swiatek) உடன் நடந்த பிரெஞ்சு ஓப்பன் டென்னிஸ் போட்டியின் நேற்றைய ஆட்டத்தின் நடுவே ஜெங், மாதவிடாய் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டார்.
19 வயதான ஜெங், உலகத் தரவரிசையில் 74-வது இடத்தில் இருக்கும் டென்னிஸ் வீராங்கனை. தன் முதல் ரோலண்ட் கேரோஸில் விளையாடும் 19 வயதே ஆன ஜெங் ஆட்டத்தின் முதல் செட்டை 6-7(5/7) என்று கைப்பற்றியிருந்தாலும் அடுத்த இரண்டு செட்டுகளில் 6-0,6-2 என்ற கணக்கில் வீழ்ந்தார்.
இரண்டாவது செட் விளையாடும் போது 3-0 என்ற நிலையில் 'மெடிக்கல் டைம் அவுட்' கேட்டார். பின்னர் அவரது காயம்பட்ட வலது காலுக்கு ஸ்ட்ராப் அணிந்து களத்திற்கு வந்தார்.
செய்தியாளர்களிடம் இதுகுறித்துப் பேசும் போது, "கால் காயம் பலமானதுதான். ஆனால் வயிற்று வலியோடு ஒப்பிடும்போது அது பரவாயில்லை. இது பெண்களுக்கு நிகழும் விஷயம். (மாதவிடாயின்) முதல் நாள் எப்போதும் கடினமாக இருக்கும். முதல் நாள் அதிக வலி இருக்கும். என்னுடைய இயல்புக்கு முரணாக இருக்க முடியாது. நான் ஆணாக இருந்திருக்க விரும்புகிறேன், அப்படி இருந்திருந்தால் இந்த பாதிப்பு நடந்திருக்காது. என்னுடைய விளையாட்டை ஆட முடியவில்லை. இது கடினமானது. இந்த வலி இல்லையென்றால் நான் இன்னும் மகிழ்ச்சியோடு விளையாடியிருப்பேன். நான் விளையாட நினைத்ததை இன்று விளையாட முடியாமல்போனது வருத்தமளிக்கிறது. நிச்சயம் இகாவை இன்னொரு போட்டியில் தோற்கடிப்பேன்" என உருக்கமாகப் பதிலளித்தார்.
from International https://ift.tt/bRA5qjr
via
