சமீப காலமாகத் தொழில்நுட்ப உலகில் உச்சத்தில் இருக்கும் கூகுள் நிறுவனத்தில் பாலின, நிற மற்றும் சாதி ரீதியிலான பாகுபாடுகள் பார்க்கப்படுவதாகப் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. கூகுள் போன்ற நிறுவனங்களில் இதுபோன்ற குற்றசாட்டுகள் எழுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் கூகுள் நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்கள்மீது பாலின பாகுபாடு காட்டுவதாக தொடரப்பட்ட வழக்கில், சம்மந்தப்பட்ட 15,500 பெண் ஊழியர்களுக்கு சுமார் 118 மில்லியன் டாலர் இழப்பீடு தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது.
ஒரே விதமான பதவிகளில் ஆண்களைவிட பெண்களுக்குக் குறைவான ஊதியம் வழங்குதல் மற்றும் தகுதி குறைவான பணிகளில் பெண்களை பணியமர்த்துதல் எனப் பெண்களை சமமாக நடத்தாமல் பாலின பாகுபாடு காட்டிவருவதாக கலிஃபோர்னியாவில் உள்ள கூகுள் நிறுவனத்தின்மீது புகார்கள் எழுந்தன. இதனைக் கண்டித்து கூகுள் நிறுவனத்தின் முன்னாள் பெண் ஊழியர்கள் கூகுள் நிறுவனத்தின்மீது 2017-ம் ஆண்டு சான் பிரான்சிஸ்கோ நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். மேலும் கூகுள் நிறுவனம் கலிஃபோர்னியாவின் சம ஊதியச் சட்டத்தை மீறியதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில் கூகுள் நிறுவனம் சார்பாக அதன் வழக்கறிஞர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில், 2013ம் ஆண்டு செப்டம்பர் 14 முதல் 236 வெவ்வேறு பதவிகளில் கூகுள் மூலம் கலிபோர்னியாவில் பணிபுரியும் 15,500 பெண் ஊழியர்களுக்கு சுமார் 118 மில்லியன் டாலர் இழப்பீடு தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது கூகுள். மேலும் இந்த வழக்கு பற்றி கூறிய கூகுள், "எங்கள் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளில் சமத்துவத்தை உறுதியாக நம்புகிறோம். ஏறக்குறைய ஐந்து வருடமாக நடைபெற்ற இந்த வழக்கில் இருதரப்பிலும் எந்தவொரு ஆதாரங்களும், தகவல்களும் கிடைக்காத நிலையில் இந்த விஷயத்தைத் தீர்ப்பது அனைவருக்கும் நல்லது. இதை இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டோம். இந்த ஒப்பந்தத்தினால் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்று தன் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.
from International https://ift.tt/4YlwWQ9
via
