அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 80-யைத் தாண்டி பலரையும் பதைபதைக்க வைத்திருக்கிறது. டாலர் இல்லை என்றால், நாம் உலக அரங்கில் கடை விரிக்க முடியாது என்பதே இன்று வரைக்கும் இருக்கும் யதார்த்தம். இந்த மாயச் சங்கிலியை உடைத்துப் பார்க்க ‘வஸ்த்ரோ’ (Vostro) என்கிற வஸ்திரத்தைக் கையில் எடுத்திருக்கிறார் ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ். அது என்ன ‘வஸ்த்ரோ’ என்று கேட்கிறீர்களா...? விளக்கமாகச் சொல்கிறேன்.
‘வஸ்த்ரோ’ என்றால்...
‘வஸ்த்ரோ’ என்ற லத்தீன் வார்த்தையின் அர்த்தம் “உங்களுடைய” என்று அர்த்தம். இதற்கும் வர்த்தகத்திற்கும் வங்கிக்கும் என்ன சம்பந்தம்?
‘வஸ்த்ரோ’ பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன் பன்னாட்டு வர்த்தகம், டாலரின் பணமதிப்பு, ஸ்விஃப்ட் (Swift) முறையிலான பணப் பரிவர்த்தனை ஆகியவற்றைத் தெரிந்துகொள்வது அவசியம். எப்படிச் செயல்படுகிறது இந்த ‘வஸ்த்ரோ’...?
இரண்டாம் உலகப்போருக்குப் பின் உலகம் முழுமைக்கும் ஒரு பொதுவான நாணயம் (Common Currency) தேவைப்பட்டது. நியாயமாய்ப் பார்த்தால், இது தங்கமாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஆனால், எங்கும் எளிதில் எடுத்துச் செல்ல முடியாது, தரமறிய முடியாது போன்ற நடைமுறை சிக்கல்கள் இருந்தன. உலகளவில் ஏற்பட்ட பல்வேறு அரசியல் மாற்றங்களால், 1971-இல் உலக வர்த்தகம் டாலரில் தஞ்சைமடைந்தது. பன்னாட்டு வர்த்தகத்தில் டாலரின் ஆதிக்கம் கூடக்கூட எல்லா நாடுகளும் அமெரிக்க டாலர்களைத் தங்கம் போல் சேர்த்து வைக்க ஆரம்பித்தன.
நீங்கள் அண்ணாச்சி கடைக்குப் போய் 200 ரூபாய் தந்து ஒரு லிட்டர் எண்ணெய் வாங்குகிறீர்கள். அண்ணாச்சி எண்ணெய் பாக்கெட்டைத் தந்து ரூபாயை வாங்கிக் கொள்கிறார். நீங்கள் ரூபாயைத் தந்து எண்ணெய் பாக்கெட்டை வாங்கிக் கொள்கிறீர்கள். இப்படி, பல கோடி பரிவர்த்தனைகள் எளிதாக முடிகிறது.
ஒருவேளை, நீங்கள் ரஷ்யாவில் இருக்கும் ஓர் கடைக்காரரிடம் போய், ‘ரஷ்ய அண்ணாச்சி, ஒரு கோடி ரூபாய்க்கு கச்சா எண்ணெய் அடுத்த வண்டியில் ஏத்தி அனுப்புங்க’ எனில், எப்படி பணம் செலுத்துவீர்கள்? உங்களிடமோ இந்திய ரூபாய் மட்டும் இருக்கும்; ரஷ்யஅண்ணாச்சியோ ரஷ்ய ரூபிள் மட்டும்தான் வாங்குவார். இந்த நிலையில், பரிவர்த்தனை எப்படி நடக்கும்? ரூபாய் - அமெரிக்க டாலர் – ரூபிள் என இருமுறை பணமாற்று முறையில் ஸ்விஃப்ட் பேமென்ட் சிஸ்டம்ஸ் வழியே நடக்கும்.
வாஸ்த்ரோவும், நாஸ்த்ரோவும்...
அதாவது, நீங்கள் இந்தியாவில் முன்னணித் தனியார் வங்கியில் கணக்கு வைத்திருப்பீர்கள். உங்கள் வங்கியிடம் போய், ‘ஒரு கோடி ரூபாயை ரஷ்ய அண்ணாச்சிக்கு ரூபிளா கொடுத்திடுங்க’ன்னு சொல்வீர்கள். அந்த வங்கி அமெரிக்காவின் பேங்க் ஆஃப் அமெரிக்கா வங்கியில் டாலர் நடப்புக் கணக்கு வைத்திருக்கும். இந்த வங்கிக் கணக்கின் பெயரே வாஸ்த்ரோ அக்கவுண்ட். இந்த வாஸ்த்ரோவின் பிம்பமாய் அவர்கள் தங்கள் வங்கியில் ஒரு கணக்கு வைத்திருக்கும். இந்த இரண்டு கணக்குகளும் துல்லியமாய் டேலி-ஆக வேண்டும். இப்படி அவர்கள் வங்கியில் வைத்திருக்கும் வங்கிக் கணக்கிற்குப் பெயர் நாஸ்த்ரோ. இந்த நாஸ்த்ரோவும் வாஸ்த்ரோவும் இணையும் துணையும் போல். வாஸ்த்ரோ மூலம் நாம் அனுப்பும் பணம் நாஸ்த்ரோ மூலம் ரஷ்ய அண்ணாச்சிக்கு போய்ச் சேர்ந்துவிடும்.
இப்படி உலகின் பெரும்பான்மையான பணவர்த்தகம் நடக்கும் ஒரு செயல்முறை அமைப்புக்குப் பெயர் ஸ்விஃப்ட் பேமென்ட் சிஸ்டம்ஸ் என்று பெயர். Society for Worldwide Interbank Financial Telecommunications என்பதன் சுருக்கம்தான் இந்த SWIFT. உலகெங்கிலும் இருக்கும் பெரிய வங்கிகளின் ஒரு கூட்டுறவு வர்த்தக அமைப்பு. இதன் பெரும்பான்மையான வர்த்தகப் பணம் அமெரிக்க டாலர்கள். வெளிநாட்டு வங்கிகள் தங்கள் நாட்டுப் பணத்தில் அல்லாமல் பிற நாட்டுப் பணத்தில் வைத்திருக்கும் கணக்கின் பெயர்தான் வாஸ்த்ரோ கணக்கு.
அப்பாடி, ஒரு வழியாக ‘வஸ்த்ரோ’ பற்றி புரிந்துகொண்டு விட்டோம். உலக மக்களுக்கு சாதகமாக இந்த ‘வஸ்த்ரோ’ முறை இருந்தாலும் இதிலும் சில பாதகங்கள் இருக்கவே செய்கிறது.
அ) 2 – 5 % வரை கட்டணமாக கொடுக்க வேண்டியிருக்கிறது. பல கோடி ரூபாய் மதிப்பில் பரிவர்த்தனை செய்யும் போது இது மிகப் பெரிய தொகை
ஆ). உலக வர்த்தகம் அனைத்தும் அமெரிக்க டாலர் (பெருமளவு) அல்லது யூரோவில் நடக்க வேண்டியிருக்கிறது. உலக நாடுகள் அனைத்தும் டாலரை நம்பி இருப்பதால், அதை வாங்கிச் சேமிக்க வைக்க வேண்டியிருக்கிறது.
இ). டாலரின் மதிப்பு மாறிக்கொண்டே இருப்பது ஒரு பிரச்னை
ஈ). இவற்றையெல்லாம்விட முக்கியமான காரணம், அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் செய்யும் சட்டாம்பிள்ளைத்தனம். அவர்களுக்கு ஆகாத நாடுகளின் மீது பொருளாதாரத் தடை என்கிற பெயரில் நாடுகளை Swift Payment System லேருந்து விலக்கி வைத்துவிடும். அப்படிச் செய்யும்போது அந்த நாடுகள் வர்த்தகம் செய்ய முடியாமல் திணறும். ஸ்விஃப்டில் இருந்து தூக்குவடன் நிற்காமல் அந்த நாடுகள் அமெரிக்க வங்கியில் டாலர் வைத்திருக்கும் கணக்கையும் அமெரிக்கா முடக்கும். சமீபத்தில் ரஷ்ய நிறுவனங்களின் 300 பில்லியன் டாலர் வங்கிக் கணக்குகளை அமெரிக்கா முடக்கியதை நீங்கள் மறந்துவிடக்கூடாது.
‘வஸ்த்ரோ’வுக்கு எதிராக சிப்ஸ்...
சீனா, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஆதிக்கத்தையும் டாலர் மற்றும் யூரோவின் ஏகபோகத்தையும் குறைக்க சீன யுவான் பட்டுவாடாக்கென்று சிப்ஸ் (CIPS – Cross Border Interbank Payment System) என்ற ஒன்றை 2015-ல் கொண்டுவந்துள்ளது. இது தற்போதைய அளவில் யுவான் பண பட்டுவாடாவிற்கே உதவும் அளவில் உள்ளது.
யுக்ரைன் போரை ஆரம்பிப்பதற்கு முன்னரே முந்தைய போரின் அனுபவத்தில் தங்கள் மீது பொருளாதாரத் தடையைக் கொண்டுவந்தால் - மேற்கத்திய நாடுகள் கோலோய்ச்சும் சர்வதேச பண வர்த்தக பளாட்ஃபாமான ஸ்விஃப்ட்டில்தான் உடனடியாக செயல்படுத்துவார்கள் என்று அறிந்து, 2017-ல் ஸ்விஃப்டிற்கு இணையான எஸ்.பி.எஃப்.எஸ் (SPFS - System for Transfer of Financial Messages) பேமண்ட் சிஸ்டத்தைக் கொண்டுவந்தது. அதாவது, தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு மாற்று பணப்பட்டுவாடா சிஸ்டத்தைக் கொண்டுவந்தது. சீனா, இந்தியா போன்ற கிழக்கு நாடுகளுடன் ரஷ்யா இதில்தான் பெரும்பாலும் பணவர்த்தகம் (ரஷ்ய ரூபிளில்) செய்கிறது.
கோதாவில் இறங்கும் இந்தியா...
இத்தனை நாளும் ஸ்விஃப்ட் முறையைப் பயன்படுத்தி வந்த அதிலிருந்து வெளியே வருவதற்கான மாற்று ஏற்பாடு என்று தேட ஆரம்பித்திருக்கிறது. அமெரிக்காவும் ஐரோப்பாவும் ஒப்புதல் அளிக்கும் நாடுகளுடன் மட்டுமே வர்த்தகம் செய்ய முடியும் என்ற நிலைமையை மாற்ற வேண்டும் என்பதும், அமெரிக்கா தவிர பிற நாடுகளுடன் நாம் செய்யும் வர்த்தகத்தில் தேவையின்றி அமெரிக்க டாலர் பாதிப்பைத் தடுக்க வேண்டும், பரிவர்த்தனைச் செலவைக் குறைக்க வேண்டும் ஆகியவையே இதற்குக் காரணங்கள்.
இந்த மாற்று எப்படிப்பட்டதாக இருக்கலாம்?
1. தங்கத்தை டாலருக்கு மாற்றாக வைக்கலாம். அது எளிதல்ல; மேலும் இன்று ட்ரில்லியன் கணக்கில் நடக்கும் வர்த்தகத்துக்கு ஈடாக தங்கம் கிடைப்பது கடினம்.
2. கிரிப்டோ கரன்சியை உபயோக்கிக்கலாம். நம்பிக்கையின்மை காரணமாக அவை இப்போதைக்கு வேலைக்காகாத விஷயமாகவே இருக்கிறது.
3. இந்திய ரூபாயில் வாஸ்த்ரோ கணக்குகள் அமைக்கலாம்
இந்த மூன்று மாற்றில் மூன்றாவது வழியைத்தான் இந்தியா இப்போது கையிலெடுத்திருக்கிறது. இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடன் கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. ஏற்கெனவே ஈரான் ரூபாயில் வர்த்தகம் செய்ய ஒப்புக்கொண்டிருக்கிறது. ஐக்கிய அமீரக நாடுகள் (UAE) 2018-லேயே பணமாற்று ஒப்பந்தம் (Currency Swap Agreement) செய்திருக்கிறது. ரூபாயில் ‘வஸ்த்ரோ’ கணக்கு வந்தால், ஐக்கிய அமீரகமும் அதில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெனிசுலாவும் இதை வரவேற்றுளளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் இந்த மாறுதலை முன்னின்று செயல்படுத்த முனைந்திருக்கிறார். ஜூலை 11-ம் தேதி இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் ‘ரூபாய் ‘வஸ்த்ரோ’ கணக்குகள் தொடங்க முடிவு செய்திருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதன்படி, இனி பன்னாட்டு வர்த்தகங்கள் ரூபாயில் நடக்கும். அதாவது, இன்வாய்ஸ்கள் ரூபாய் அடிப்படையில் உருவாக்கப்படும். இரு வேறு நாடுகளின் கரன்சி மதிப்பை சந்தை முடிவு செய்யும். கடைசியில் ரூபாய் மதிப்பில் அடிப்படையிலேயே இன்வாய்ஸ் முடிக்கப்படும்.
இதுவும் ஸ்விஃப்ட் பேமென்ட் சிஸ்டம் போலவே செயல்படும். பேங்க் ஆஃப் அமெரிக்கா, சிட்டி பேங்குக்குப் பதிலாக இந்தியாவின் இரு வங்கிகள் இருக்கும். வெளிநாட்டு வங்கிகள் இந்திய வங்கி ஒன்றில் ‘ரூபாய் ‘வஸ்த்ரோ’ கணக்கு துவங்கி அதன் வழியே வர்த்தகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு என்ன நன்மை கிடைக்கும்?
தற்போதைய நிலையில் ஏட்டுத் திட்டமாக இருக்கும் இது, நடைமுறைக்கு வரும்போது ஏற்படப்போகும் சாதகங்கள் பல.
1. அமெரிக்கா & ஐரோப்பிய நாடுகளின் சட்டாம்பிள்ளைத்தனம் ஒழியும்
2. இந்தியா, அமெரிக்கா அல்லாத பிற நாடுகளுடன் வர்த்தகம் செய்ய டாலரை நாடத் தேவையில்லை.
3. இந்தியாவின் மிகப் பெரிய பிரச்னையான கச்சா எண்ணெய் இறக்குமதியை முழுமையாக டாலரின் உதவியின்றி செய்ய முடியும்
4. டாலர் மதிப்பின் மாற்றம் இதில் பங்கேற்கும் நாடுகளைப் பெரிதாக பாதிக்காது
5. இதன் கட்டணம் ஸ்விஃப்ட்டைவிடக் குறைவாக இருக்கும்
6. இந்தியா சில பல நாடுகளுடன் இம்முறையில் வர்த்தகத்தை நடத்திக் காட்டினால் மற்ற நாடுகளும் பொதுப்பணத்தை டாலரிலிருந்து ரூபாய்க்கு மாற்றக்கூடும். இது நடக்கும்போது ரூபாயின் மதிப்பு கூடும்.
7. இந்திய வர்த்தக நிறுவனங்களுக்கு சந்தையில் ஏற்படும் மாற்று விகித அதிர்வுகளிலிருந்து நிம்மதி கிடைக்கும். தற்போது சர்வதேச சந்தையில் டாலரில் இன்வாய்ஸ்கள் எழுப்ப வேண்டியிருப்பதால், பணம் செட்டில்மென்ட் ஆகும்போதும், அதை இந்திய ரூபாய்க்கு மாற்றும் போதும், டாலரின் மதிப்பு கூடுதலாய் இருந்தால் அது சார்ந்த நஷ்டத்தை இந்திய வர்த்தகங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றன. இனி இந்திய ரூபாயிலேயே விலை நிர்ணயம் செய்யலாம் என்பதால், அந்தத் தொகை சந்தை அபாயங்களிலிருந்து பாதுகாக்கப்படும்.
அமெரிக்க அண்ணாத்தே ஒத்துக்கணுமே!
இந்தத் திட்டத்திற்கு பாதகம் என்று எதுவுமில்லை ஆனால், மிகப் பெரிய ஆபத்து இருக்கிறது. இதை அமெரிக்கா எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்பதே அது. இந்தத் திட்டம் வெற்றிகரமாகச் செயல்பட ஆரம்பித்தால், அது டாலரின் ஏகபோகத்தைக் குறைக்கும். அதைத் தடுக்க அமெரிக்கா என்னவெல்லாம் செய்யப்போகிறது, அவற்றை இந்தியா எப்படி எதிர்கொள்ளப்போகிறது. அமெரிக்க அழுத்தத்தைத் தாங்க முடியாமல் பின்வாங்குமா அல்லது இந்தியாவின் மிகப் பெரிய வர்த்தகப் பங்காளியான அமெரிக்காவை எதிர்த்து சாதிக்குமா என்பதற்கெல்லாம் பதில்கள் ஒரு சில மாதங்களில் தெரியவரும்.
பாரத ரத்னா சக்திகாந்த தாஸ்...
சுருக்கமாக, ரூபாயில் ‘வஸ்த்ரோ’ கணக்கு வெற்றி பெற்று வேகமாய் பரவினால் அது இந்தியாவின் மதிப்பையும் ரூபாயின் மதிப்பையும் உலக அரங்கில் உயர்த்தும். போனஸாக சக்திகாந்த தாஸுக்கு பாரத ரத்னாவும் கிடைக்கும் என்று எதிர்பார்ப்போம்!
from International https://ift.tt/fRxHPAr
via
