அமெரிக்க ஹவுஸ் சபாநாயகர் நான்சி பெலோசி, மலேசியா, தைவான் உட்பட 4 ஆசிய நாடுகளுக்கு விஜயம் செய்யும் விதமாகக் கடந்த திங்களன்று தனது சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். நான்சி பெலோசி, குறிப்பாகத் தைவானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவை, சீனா கடுமையாக எச்சரித்துவந்தது. இருப்பினும் அமெரிக்கா, சீனாவின் எச்சரிக்கைகளை மீறி தனது பயண திட்டத்தில் உறுதி காட்டியது. இந்த விவகாரத்தில் தைவானும் தன் பங்குக்கு, சீனாவுடன் போரிடத் தயாராகும் வகையில் தங்களுடைய வான்படைகளைத் திரட்டுவதாகச் செய்திகள் வெளிவந்தன.
அதைத்தொடர்ந்து, `நான்சி பெலோசி தைவானுக்குச் சென்றால் அமெரிக்கா அதற்குத் தக்க விலையைக் கொடுக்கும்' என நேற்று மீண்டுமொருமுறை சீனா எச்சரித்திருந்தது. இருப்பினும் நான்சி பெலோசி இத்தகைய எதிர்ப்புகளையெல்லாம் கண்டுகொள்ளாமல் தைவானுக்கு நேற்று விமானத்தில் புறப்பட்டார்.
இதுகுறித்து சர்வதேச விமான கண்காணிப்பு சேவை நிறுவனமான பிளைட் ரேடார் 24-ன் தகவல் தொடர்பு இயக்குநர் இயன் பெட்செனிக், ``நான்சி பெலோசி பயணித்த விமானம் பாதுகாப்பாக தைவானில் தரையிறங்கும் வரையில், சுமார் 7 லட்சம் பேர் அந்த விமானத்தைக் கவனித்தனர். எந்த காலத்திலும் இல்லாத வகையில் அதிகமானோரால் இந்த விமானம் கவனிக்கப்பட்டிருக்கிறது" என்றார்.
நான்சி பெலோசி பயணித்த விமானம் தைவான் வான் எல்லைக்குள் வந்தபோது தைவான் விமானப்படை போர் விமானங்கள் பெலோசியின் SPAR19 விமானம் விமானத்தை சுற்றி பாதுகாப்பு கொடுத்து பத்திரமாக தைபே விமான நிலையத்துக்கு அழைத்துச் சென்றன.
அதைத்தொடர்ந்து தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில், `ஆகஸ்ட் 2 அன்று தைவானின் வான் பாதுகாப்பு மண்டலத்தில் 21 சீன போர்விமானங்கள் பறந்தது' என்று ட்வீட் செய்திருக்கிறது. இந்த நிலையில் நான்சி பெலோசியின் பயணத்துக்கு பதிலடி தரும் விதமாக, தைவானைச் சுற்றியுள்ள பகுதியில் சீன ராணுவம் தனது படையை பெருக்கி இருப்பதாகவும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கிறது.
from International https://ift.tt/DmPeVW6
via
