`உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடு நாங்கள்தான்' என்று முழங்கிக் கொண்டிருக்கும் சீனாவில், தற்போது வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டிருக்கிறது. பெரும் நதிகள் தொடங்கி ஏரி, குளங்கள் வரை அனைத்தும் வறண்டுவிட்டன. இதனால், சீன தேசத்து மக்கள் பெரும் கஷ்டங்களைச் சந்தித்துவருகிறார்கள். இந்த நிலையைச் சரி செய்யச் சீன அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. எப்படி வறட்சி உண்டானது... இதைச் சமாளிக்கச் சீனா எடுத்துவரும் நடவடிக்கைகள் என்னென்ன?
வெப்ப அலையும்... வறட்சியும்!
கடந்த சில மாதங்களாகவே சீன தேசம் முழுவதும் வெப்ப அலை நிலவிவருகிறது. இந்த வெப்ப அலையால், தினசரி 40 டிகிரி செல்சியஸைத் தாண்டுகிறது வெப்பத்தின் அளவு. இதனால், அந்த நாட்டிலுள்ள நீர்நிலைகளில் தண்ணீர் வற்றத் தொடங்கி வறட்சி ஏற்பட்டது. உலகின் மூன்றாவது பெரிய நதியான யாங்சே வறண்டு காணப்படுகிறது. சீனாவின் மத்திய பகுதிக்கான நீர்த் தேவையைப் பூர்த்தி செய்துவந்த இந்த நதி வற்றியதால், கடும் வறட்சி ஏற்பட்டிருக்கிறது. சீனாவின் புகழ்பெற்ற ஏரிகளில் ஒன்றான போயாங் ஏரியும் வறண்டுவிட்டது. இவை தவிர, நாட்டின் பல்வேறு நீர்நிலைகளும் வறண்டே காணப்படுகின்றன. செப்டம்பர் மாத இறுதிவரை சீனாவில் கடுமையான வெப்பம் நிலவும் என எச்சரிக்கப்பட்டிருக்கிறது.
என்னென்ன பாதிப்புகள்?
நீர்நிலைகள் வறண்டுவிட்டதால், நீர் வழி தயாரிக்கப்படும் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால், தொழிற்சாலைகளில் மின் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது, உற்பத்தியும் குறைந்திருக்கிறது. கடும் வறட்சியால் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாகச் சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில், வெப்ப நிலை 45 டிகிரி செல்சியஸைத் தாண்டியிருக்கிறது. இதனால், அங்கிருக்கும் 2.2 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் பயிர் செய்யப்பட்டிருக்கும் விவசாய நிலங்கள் கடும் பாதிப்பைச் சந்தித்திருக்கின்றன. மேலும், சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்டிருக்கும் கடுமையான வெப்ப நிலையைச் சமாளிக்க, வீடுகளில் ஏ.சி-க்களின் பயன்பாட்டை மக்கள் அதிகப்படுத்தியிருக்கின்றன. இதனால், மின் சிக்கன நடவடிக்கையாக, அந்த மாகாணத்திலுள்ள மொத்த தொழிற்சாலைகளும் மூடப்பட்டிருக்கின்றன.
செயற்கை மழை!
தொழிற்சாலைகள், விவசாயம், மின் உற்பத்தி என நாட்டின் முக்கியத் தேவைகள் அனைத்தும் முடங்கும் நிலையிலிருப்பதால், அதைச் சரி செய்யச் சீன அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சிகளில், `செயற்கை மழை' உருவாக்குவதை முதன்மையாகக் கொண்டிருக்கிறது சீனா. `நாட்டின் வறட்சியைச் செயற்கை மழை மூலம் நிச்சயம் சரி செய்யலாம்' எனச் சீன விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றன. இதனால், மேக விதைப்பு திட்டம் மூலம் செயற்கை மழை உருவாக்க முடிவு செய்திருப்பதாக அறிவித்திருக்கிறது சீன வேளாண்துறை அமைச்சகம்.
மழைத் துளிகள் அதிகமாக இருக்கும் மேகங்களைக் கண்டறிந்து, அவற்றை ஒன்றிணைத்து, அந்த மேகங்கள்மீது விதைகளாக்கப்பட்ட வேதிப்பொருள்களைத் தூவி, மழை பொழியச் செய்வதே செயற்கை மழைத் திட்டம். `இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவது அவ்வளவு எளிதல்ல' என்கின்றனர் வானியல் நிபுணர்கள். மேலும், இந்தத் திட்டத்தின் மூலம் மழை பொழியச் செய்வதற்கு அதிக அளவில் பணம் செலவாகும் என்றும், வேதிப்பொருள்களால் மாசு உண்டாகும் என்றும் சொல்லப்படுகிறது.
சீனாவின் இந்த நிலை குறித்துப் பேசும் சூழலியல் ஆர்வலர்கள் சிலர், ``கால நிலை மாற்றத்தால் சீனா இன்று சந்தித்துக் கொண்டிருக்கும் வறட்சி, உலக நாடுகள் அனைத்துக்குமான ஒரு பாடம். கடந்த ஆண்டு வரலாறு காணாத வெள்ளத்தால் திண்டாடிய சீனா, இன்று வரலாறு காணாத வறட்சியால் பாதித்திருக்கிறது. சூழலியல் திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காவிட்டால், விளைவுகள் மோசமானதாக இருக்கும். இயற்கை வளங்களைக் காக்காவிட்டால், நாட்டின் மற்ற அனைத்து வளங்களும் அழிந்துவிடும். எனவே, உலக நாடுகள் அனைத்தும் சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் கொடுக்க முன்வர வேண்டும்'' என்கின்றனர்.
from International https://ift.tt/nbYeGfq
via
