``சாதிய பாகுபாட்டைத் தடை செய்ய சட்டம்!" எங்கே என்று கேட்கிறீர்களா? வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள சியாட்டல் நகரத்தில், அந்த நகரின் பேரவை உறுப்பினர் சாமா சாவந்த் இந்தச் சட்டத்தை முன்மொழிந்துள்ளார்.
"தெற்காசிய மற்றும் புலம்பெயர் மக்களுக்கு உதவும் வகையில், இந்த நாட்டிலேயே முதன்முறையாக இந்த நகரத்தில்தான் சாதிய பாகுபாட்டை ஒழிக்கும் சட்டம் முன்மொழியப்படுகிறது என்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்" என்று சியாட்டல் நகர கவுன்சிலில் அதன் பேரவை உறுப்பினர் சாமா சாவந்த் அறிவித்துள்ளார்.
மேலும் இவர் பேசுகையில், "வாஷிங்டன்னில் வசிக்கும் தெற்காசியாவை சேர்ந்த சுமார் 1,67,000 மக்கள், பெருமளவில் சியாட்டல் நகரில்தான் இருக்கின்றனர். அதனால் இந்த நகரம் சாதிய பாகுபாடு குறித்து கண்டிப்பாகப் பேசவேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
I congratulate @SeattleCouncil member @cmkshama's historic ordinance to protect over 1,67,000 South Asian people living in the Greater Seattle area from caste discrimination.
— M.K.Stalin (@mkstalin) January 30, 2023
Progressive step to eradicate discrimination in any form is really laudable. https://t.co/gratGfXxBH
சாதிய பாகுபாட்டை தடைசெய்யும் சட்டத்தை முன்மொழிந்த சாமா சாவந்திற்கு தன் வாழ்த்துகளைக் கூறியுள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
யார் இந்த சாமா சாவந்த்?
சாமா சாவந்த் இந்தியாவைச் சேர்ந்தவர். சிறுவயது முதலே, தன்னைச் சுற்றியுள்ள சமுதாயத்தில் இருந்துவரும் ஏழ்மை மற்றும் ஏற்றத்தாழ்வுகளை பார்த்தே வளர்ந்திருக்கிறார்.
இந்தியாவில் கம்ப்யூட்டர் இன்ஜினீயராக பணியாற்றிக் கொண்டிருந்த இவர், ஏழ்மை மற்றும் அடக்குமுறை பற்றி விரிவாகத் தெரிந்துகொள்ள பொருளாதாரத்தை பயில அமெரிக்காவிற்கு இடம்பெயர்கிறார். அங்கேயும் இருந்துவரும் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் அடக்குமுறைகள் இவரை அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன.
அமெரிக்காவில் முனைவர் பட்டம் பெற்ற சாமா, சியாட்டல் நகரில் உள்ள சியாட்டல் சென்ட்ரல் கம்யூனிட்டி காலேஜில் பேராசிரியராகப் பணிப்புரியத் தொடங்குகிறார். 2006-ம் ஆண்டு சாமா சோஷியலிஸ்ட் ஆல்டர்நேட்டிவ் என்னும் சோஷலிச கட்சியில் சேர்ந்துள்ளார்.
அப்போதிருந்து ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போரை நிறுத்துவதற்கான போராட்டம் உள்ளிட்ட பல சமூக போராட்டங்களில் கலந்துகொண்டிருக்கிறார்.
2012-ம் ஆண்டு சாமா சாவந்த் சோஷியலிஸ்ட் ஆல்டர்நேட்டிவ் கட்சியின் வேட்பாளராக சியாட்டல் நகர் கவுன்சில் தேர்தலில் களமிறங்குகிறார். அதே தேர்தலில், 29 சதவிகித வித்தியாசத்தில் வெற்றி பெற்று அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறார்.

அடிப்படையில், சாமா சாவந்த், சமூக நீதிக்காகப் போராடும் ஆர்வலர். இவர் சியாட்டல் பேரவை உறுப்பினராக தொழிலாளர்கள், இளைஞர்கள், ஒடுக்கப்பட்டோருக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
ஒரு சராசரி தொழிலாளரின் ஊதிய அளவை மட்டுமே தனது ஊதியமாக சாமா சாவந்த் பெற்று வருகிறார். மீதமுள்ள இவரது ஆறு இலக்க ஊதியத்தை சமூக போராட்டங்களுக்காகக் கொடுத்துவிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் முன்மொழிந்த சாதிய பாகுபாட்டைக் களைவோம் என்ற சட்டம் அனைவருக்கும் முன்மாதிரியானது. வேங்கை வயலில் நடந்தது போன்ற சம்பவங்கள் இந்த மாதிரியான சட்டத்தின் அவசியத்தை நமக்குத் தெரிய வைத்துக்கொண்டே இருக்கின்றன.
இந்தச் சட்டம் நமது நாட்டுக்கும் வேண்டும்தானே மக்களே?
from International https://ift.tt/i1tEDmd
via
