பிரதமர் மோடி கடந்த 23-ம் தேதி அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது அங்கு நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட பிரதமர் மோடியிடம் வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் பத்திரிகையாளர் (The Wall Street Journal) சப்ரினா சித்திக், இந்தியாவில் முஸ்லீம்கள் மற்றும் பிற சிறுபான்மையினரின் உரிமைகளை மேம்படுத்த அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, ``இந்தியாவில் எந்த வித மத, இன, சாதிப் பாகுபாடுகளுக்கும் இடமில்லை" எனத் தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரம் இந்தியா முழுவதும் பேசுபொருளானது. அதைத் தொடர்ந்து, பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர் சப்ரினா சித்திக்-கை சமூகவலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, வோல் ஸ்ட்ரீட் ஜர்னலின் பத்திரிகையாளர் ஜான் கிர்பியிடம், சக பத்திரிகையாளர் சப்ரினா சித்திக் எதிர்கொள்ளும் துன்புறுத்தலுக்கு வெள்ளை மாளிகையின் எதிர்வினை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், ``அந்தத் துன்புறுத்தல் பற்றிய தகவல் எங்களுக்குத் தெரியும். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. எந்த இடத்திலும், எந்த சூழ்நிலையிலும் பத்திரிகையாளர்கள் துன்புறுத்தப்படுவதை வெள்ளை மாளிகை கண்டிக்கிறது. பத்திரிகையாளர்களை துன்புறுத்துவது ஜனநாயகத்தின் கொள்கைகளுக்கு எதிரானது. இந்தச் செயலுக்கு எங்ளுடைய கண்டனங்கள்" எனத் தெரிவித்திருக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா மற்றும் எகிப்து பயணத்தை முடித்துக்கொண்டு ஞாயிற்றுக்கிழமை இரவு இந்தியா திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
from International https://ift.tt/DujNy7d
via
