காதல் எல்லைகளைக் கடந்தது, காதலின் பெயரில் செய்யும் அனைத்தும் நியாயமானவை என பலர் சொல்ல நாம் கேட்டிருப்போம். உலகம் முழுக்க காதல் மீது அபரிமிதமான பேரார்வம் கொண்டவர்கள் பலர் உள்ளனர். அவர்கள் தங்கள் இணையருக்காக எதையும் செய்யக்கூடிவர்கள். மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களைச் சந்திக்க மைல்கள் கடந்து பயணம் செய்த நிகழ்வுகள் நடந்துள்ளன. அதே சமயம் காதல் விஷமாகி எல்லை மீறும் நிகழ்வுகளும் சில இடங்களில் நடந்துள்ளன.
அப்படி சீனாவை சேர்ந்த ஒரு பெண், தன் காதலரை தன்னுடன் தக்கவைத்துக்கொள்ள தான் வேலை செய்யும் அலுவலகத்தில் திருடி வசமாக மாட்டிக்கொண்டுள்ளார்.
வடகிழக்கு சீனாவில் உள்ள லியோனிங் மாகாணத்தில் வசிப்பவர் வாங். 24 வயது பெண்ணான இவர் ஒரு நிறுவனத்தில் கணக்காளராகப் பணியாற்றி வந்துள்ளார். இதற்கிடையில் இவர் தன் காதலரை எப்போதும் தன்னுடனேயே இருக்க வைக்க விரும்பியுள்ளார். அதற்கான தேடுதலில், ஆன்லைனில் இவர் கண்ணில் சிக்கின ஜோசியம் மற்றும் ஜாதக விளம்பரங்கள். அவற்றால் தூண்டப்பட்ட வாங், சூனியம் செய்து தன் காதலரை தன் வசம் இருக்க வைக்க நினைத்துள்ளார்.
இதற்கான முயற்சிகளின் போது ஓர் ஆன்மீக குரு, வாங்கிடம் இருந்து 4 மில்லியன் யுவான்களை பெற்றுக்கொண்டு அவரை வேறு ஒரு பெரிய குருவிடம் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு தாய்லாந்து முறையில் செய்யப்படும் சூனியத்தால் வாங் உறவில் இருக்கும் பிரச்னைகள் முடிந்துவிடும், அதனால் அவரின் காதலர் கூடவே இருப்பார் என நம்பவைத்துள்ளார்.
இந்த சூனிய சடங்குகளுக்காக கொஞ்சம் கொஞ்சமாக சுமார் 150 முறை என மொத்தமாக 4.8 மில்லியன் யுவான்களை அந்த ஆன்மீக குருவுக்கு அனுப்பியுள்ளார் வாங். இதற்காக தான் வேலை செய்த நிறுவனத்தில் இருந்து பணத்தைத் திருடியுள்ளார் வாங்.
மேலும் திருடிய பணத்தில் ஏராளமான ஹேண்ட் பேக்குகள், புது உடைகள் என வாங்கித் தள்ளியுள்ளார். பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது போல ஒருநாள், வாங் தன் நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். ஆனால் அதற்கெல்லாம் அவர் சற்றும் வருந்தவேயில்லை. காரணம் சூனிய சடங்குகள் அவரது உறவை பலப்படுத்தியதாக அவர் நம்புகிறார். வாங்கின் காதலர் தற்போதும் அவருடனேயே இருக்கிறார்.
from International https://ift.tt/VkP2WY4
via
