அமெரிக்க அதிபர் தேர்தல் 2024 நவம்பர் 5-ம் தேதி, நடைபெறுகிறது. தற்போது, அதிபராக இருக்கும் ஜோ பைடனின் பதவிக்காலம் அடுத்தாண்டு நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து, அடுத்த தேர்தலிலும் தான் போட்டியிடவிருப்பதாக பைடன் அறிவித்திருக்கிறார். அமெரிக்காவில் பல கட்சிகள் இருந்தாலும், குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சிகளுக்கிடையேதான் அதிபர் தேர்தலில் எப்போதும் போட்டி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான போட்டியில் குடியரசுக் கட்சி சார்பில் டொனால்டு ட்ரம்ப்தான் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்த்த நிலையில், தற்போது மூன்று இந்திய - அமெரிக்க வேட்பாளர்கள் இணைந்திருக்கின்றனர். குடியரசுக் கட்சியின் அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலில் ட்ரம்ப் முன்னிலையில் இருந்தாலும், அவர்மீது இருக்கும் வழக்குகள், அவருக்குச் சிக்கலை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், மூன்று இந்திய - அமெரிக்கர்கள் அவருக்கு அடுத்தடுத்து நிலைகளில் இருப்பதால், யாரை அதிபர் வேட்பாளராகக் குடியரசுக் கட்சி அறிவிக்கும் என்பதில் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்திய - அமெரிக்க தலைவர்களான நீக்கி ஹாலே, விவேக் ராமசாமி, ஹிர்ஷ் வர்தன் சிங் ஆகியோர் ரேஸில் இருக்கின்றனர்.
தொழிலதிபரான விவேக் ராமசாமி அடிப்படையில் ஓர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவரின் பெற்றோர் கேரள மாநிலம் பாலக்காட்டுக்கு அருகிலுள்ள வடக்கன்சேரியைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். இவர், `மருத்துவ மேம்பாடு, சுகாதாரம் ஆகியவற்றுக்காக சீனாவை நம்பி இருப்பதைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என உறுதியளித்தார்.
குடியரசுக் கட்சியில் போட்டியிடும் பெண் வேட்பாளர் என்ற பெருமையைப் பெற்றார் நிக்கி ஹேலி (Nikki Haley). முன்னாள் தென் கரோலினா ஆளுநரும், ஐக்கிய நாடுகளின் தூதருமான இவர், செவ்வாயன்று அதிபருக்கான தனது வேட்புமனுவை அறிவித்தார். தன்னுடைய பதவிக்காலத்தைப் பற்றி பெருமையுடன் விவரித்தார். ட்ரம்ப்புக்கு எதிராக இவர் களமிறங்குவார் என யாரும் எதிர்ப்பாக்கவில்லை.
பொறியாளரான ஹிர்ஷ் வர்தன் சிங் (Hirsh Vardhan Singh) அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் தன்னை தற்போது இணைத்துக்கொண்டிருக்கிறார். இதையடுத்து, இவர் தனது ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் ``நான் என்றைக்கும் குடியரசுக் கட்சியின் தீவிரத் தொண்டனாக இருப்பேன்'' எனத் தெரிவித்தார். இவர் `முதலில் அமெரிக்கா' (America First) என்ற கொள்கையை முன்னிறுத்துகிறார். தன்னுடைய இந்தக் கருத்துகளால் மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.
2024 ஜூலை மாதத்தில் நடைபெறவிருக்கும் குடியரசுக் கட்சியின் பொதுக்கூட்டத்தில் யார் அதிபர் தேர்தலின் வேட்பாளர் என அந்தக் கட்சி அதிகாரபூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பரபரப்பாக நடைபெற்றுவரும் இந்த அரசியல் சூழல் ட்ரம்ப்புக்கு ஆதரவாக அமையுமா... இல்லையா... என்பது அடுத்த வருடமே தெரியவரும்.
from International https://ift.tt/YPaWXox
via
