சீனாவின் இயற்கை வளத்துறை அமைச்சகம், தேசிய வரைபட விழிப்புணர்வு வாரத்தை ஜெஜியாங் மாகாணத்தின் டெகிங் பகுதியில் ஆகஸ்ட் 28-ம் தேதி கொண்டாடியது. இதை முன்னிட்டு இந்தாண்டுக்கான தேசிய வரைபடம் ஒன்றும் வெளியிடப்பட்டது. அதில் இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்துக்கு ‘தெற்கு திபெத்’ என பெயரிட்டும், கடந்த 1962-ஆம்ஆண்டு போரில் ஆக்கிரமித்த பகுதியை ‘அக் ஷய் சின்’ என்றும் சீனா குறிப்பிட்டுள்ளது. இதனிடையே சமீபத்தில் தென்ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்கு இடையே சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேசிய பிரமதர் நரேந்திர மோடி, ‘இந்தியா - சீனா எல்லை பகுதிகளில் தீர்க்கப்படாத பிரச்னைகள் கவலையளிப்பதாக’ தெரிவித்தார். அதோடு, ‘இந்தியா - சீனா உறவு இயல்பு நிலைக்கு திரும்ப எல்லையில் அமைதி நிலவுவது முக்கியம்’ என பிரதமர் மோடி வலியுறுத்தியதாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் தெரிவித்தார்.
இப்போது வெளியாகி உள்ள புதிய வரைபடம் குறித்து சீன இயற்கை வளங்கள் துறை அமைச்சகத்தின் திட்டமிடல் துறை தலைவர் வூ வென்சாங், “நாட்டின் வளர்ச்சியை ஊக்குவிப்பதில் வரைபடம் புவியியல் அமைப்பு தகவல்கள் முக்கிய பங்காற்றுகின்றன. இயற்கை வளங்கள் மேலாண்மை, சூழலியல் மற்றும் நாகரீகங்களை உருவாக்கவும் இது உதவுகிறது” என்று கூறியுள்ளார்.
நிலைமை இவ்வாறு இருக்க, சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான அரசு, சர்வதேச விதிமுறைகளை மீறி, அடுத்த நாடுகளின் எல்லைகளை உரிமைகொண்டாடுவதில் மிக மோசமான வியூகங்களை பயன்படுத்துகிறது எனக் குற்றம்சாட்டியுள்ள, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், “இது சீனாவின் பழைய பழக்கம். நமது பகுதிகள் என்ன என்பதில் இந்த அரசு மிக தெளிவாக உள்ளது. அபத்தமாக உரிமை கோருவதன் மூலம், அடுத்த நாட்டின் பகுதிகள் சீனாவுடையது ஆகாது” என்றார்.
“சீனா இதுபோல் கூறுவதுமுதல் முறையல்ல. இதுபோன்ற முயற்சிகளுக்கு, இந்தியா ஏற்கெனவே கண்டனம் தெரிவித்துள்ளது. அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி. புதிதாக பெயர் வைப்பதால், உண்மை நிலவரத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது” என்கிற கருத்தை முன் வைத்திருக்கிறார் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் அரிந்தம் பாக்சி.
இந்தியா - சீனா எல்லை பிரச்னை மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில், “லடாக்கில் ஒரு அங்குல நிலம் கூட சீனா கைப்பற்றவில்லை என்று பிரதமர் கூறினார். ஆனால் சீனா உண்மையில் நம் நிலத்தை கைப்பற்றியுள்ளது. நமது நிலத்தை சீனா அபகரித்துள்ளது. லடாக் முழுவதற்கும் தெரியும். அருணாச்சலப் பிரதேசத்தின் வரைப்படத்தின் விஷயம் தீவிரமானது. இதற்கு பிரதமர் பதில் சொல்லியே ஆக வேண்டும்” என்று கடுமையான விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி.
இந்தியா-சீனா எல்லை பிரச்னையானது இன்று, நேற்று நடந்த ஒரு நிகழ்வல்ல:
கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது, அக்டோபர் 23, 1962-ஆம் ஆண்டு சீனா, பூட்டான் எல்லையை ஒட்டிய வடகிழக்கு இந்தியாவின், தொலைதூர இமயமலைப் பகுதியில் சீன வீரர்கள் நுழைந்து தீவிர தாக்குதலில் ஈடுபட்டனர். இன்று அது பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்களைக் கொண்ட இந்திய மாநிலமான அருணாச்சல பிரதேசமாக அறியப்படுகிறது. அதைத் தனது பிரதேசம் என்று தொடர்ந்து சீனா உரிமை கோரி வருகிறது. இதன் உட்சக்கட்டமாக கடந்த ஓராண்டில் இந்தியா - சீனா இடையே இப்பகுதிக்கு சொந்தம் கொண்டாடுவது யார் என்கிற போட்டி தீவிரம் அடைந்துள்ள நிலையில் இப்போது, இப்பகுதியை தனது நாட்டின் வரைபடத்துடன் இணைத்திருக்கிறது சீனா.
ஆசியாவின் இரண்டு பெரிய, அணு ஆயுதம் கொண்ட அண்டை நாடுகளான இந்தியா - சீனாவின் அத்துமீறல்கள், ஊடுருவல்களுக்காக ஒருவரையொருவர் குற்றம் சாட்டுவதும் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்தியாவின் கூற்றுப்படி அருணாச்சல பிரதேசத்தின் 1,126 கி.மீ நீளமுள்ள கிழக்கு எல்லை, சீனாவால் ஒருபோதும் அங்கீகரிக்கப்படாதது. அது மேக்மஹோன் கோடு மூலம் உருவாக்கப்பட்டது. 1914-ஆம் ஆண்டு இந்திய வெளியுறவு செயலராக இருந்த ஹென்றி மெக்மஹோன் என்ற ஆங்கிலேயரின் நினைவாக இது அழைக்கப்படுகிறது. ஆனால், சீனா அருணாச்சல பிரதேசம் மீதான தனது உரிமைகோரலை கைவிடவில்லை. இன்னும் பெரும்பாலான பகுதிகளை ‘தெற்கு திபெத்’ என குறிப்பிட்டு வருகிறது.
முன்னதாக டெல்லியிலிருந்து நேரடியாக ஆட்சி செய்யப்பட்ட அருணாச்சல பிரதேசம், 1987-இல் ஒரு மாநிலமாக மாற்றப்பட்டது. இது சீனாவுக்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தியது. பல ஆண்டுகளாக இந்தியாவும் எல்லையில் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பை பலப்படுத்தியது. அதற்கு அருகில் கிராமங்களை உருவாக்கி வருகிறது. அதோடு, அருணாச்சல பிரதேசத்திற்கு இந்தியத் தலைவர்களின் வருகை சீனாவை எரிச்சலூட்டியது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 2008-ஆம் ஆண்டு அந்த மாநிலத்திற்குச் சென்று சாலை அமைக்கும் திட்டப் பணிகளை அறிவித்தபோது, சீனா முறையாக எதிர்ப்பு தெரிவித்தது.
அந்த மாநிலத்திற்கு ஆசிய வளர்ச்சி வங்கி கடனளிப்பதை எதிர்த்தது. இதோடு நில்லாமல், இந்திய ராணுவ அதிகாரிகளுக்கும் அப்பகுதியிலுள்ள அதிகாரிகளுக்கும் விசாவை மறுத்தது. இதனையடுத்து, 2014-ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி, அருணாச்சல பிரதேசத்தின் தொலைதூர, புறக்கணிக்கப்பட்ட பகுதிகளை மேம்படுத்த 2,000 கிமீட்டருக்கு புதிய சாலைகள் அமைக்கும் திட்டத்தை அறிவித்தார்.
பெயர் மாற்றமும், சீனாவின் புதிய சட்டமும்:
அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பல இடங்களின் பெயர்களை கடந்த ஆறு ஆண்டுகளில் மூன்று முறை மாண்டரின் மொழியில் மாற்றியுள்ளது சீனா. இந்த பெயர் மாற்றங்கள் அனைத்தும் நரேந்திர மோடியின் ஆட்சியின் போதுதான் செய்யப்பட்டுள்ளன. இதனிடையே, கடந்த ஆண்டு அக்டோபரில் புதிய எல்லை சட்டத்தை நிறைவேற்றிய சீனா, கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தியது. இந்தச் சட்டத்தின் கீழ், சீனாவுடன் எந்த எல்லையில் தகராறு உள்ளதோ, அந்த நிலம் சீனாவின் அதிகார வரம்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எல்லைப் பகுதிகளில் ‘கட்டுமானப் பணிகளை’ மேம்படுத்துவது, கட்டுமானத்திற்கான துணை திறனை வலுப்படுத்துவது போன்றவையும் புதிய சட்டத்தின் வரம்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் அமலுக்கு வருவதற்கு இரண்டு நாள்களுக்கு முன் அருணாசலப் பிரதேசத்தின் 15 குடியிருப்புப் பகுதிகள், மலைகள் மற்றும் ஆறுகளுக்கு சீனா தமது மொழியில் பெயர் சூட்டியது. சீனாவின் இந்த நடவடிக்கையை இந்தியா கண்டித்து, அந்த பெயர்களை நிராகரிப்பதாக அறிவித்திருப்பதோடு, `பெயரை மாற்றுவதால் கள யதார்த்தம் மாறாது’ என்றது.
இந்திய-சீனா மோதல்களும் பொருளாதார சிக்கல்களும்:
சீன ஆக்கிரமிப்பு மற்றும் பெயர் மாற்றம், வரைப்படங்களில் இணைப்பது குறித்து இந்தியா பதிலளிப்பது வெறும் ராணுவம் தொடர்பானது மட்டும் அல்ல. அரசியல் மற்றும் வணிக நலன்கள் சார்ந்தும் இருக்கிறது. ஒருவேளை கடுமையாக இந்தியா சீனாவுக்கு பதிலடி கொடுக்க முடிவு செய்தால், அது எப்போது, எப்படி பதிலளிக்கும் என்பதை இந்தியா சிந்திக்க வேண்டியதும் மிகவும் முக்கியமானது. ஏனென்றால், பொருளாதார ரீதியாகவும், அந்நாட்டின் பலத்துடனம் ஒப்பிட்டு பார்ப்பது அவசியமானதாக இருக்கிறது. அதன்படி பார்க்கும் போது, 2022-ஆம் ஆண்டு சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 18 டிரில்லியன் டாலராகவும், இந்தியாவின் ஜிடிபி 3.5 டிரில்லியன் டாலருக்கு குறைவாகவும் இருந்ததை இங்கு கவனிக்க வேண்டும். அதன் அடிப்படையில், கடந்த ஆண்டு சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 230 பில்லியன் டாலர்கள் ஆகும். இது இந்தியாவின் பாதுகாப்பு பட்ஜெட்டை விட மூன்று மடங்கு அதிகம்.
ஆசியாவின் மிக முக்கிய இரு நாடுகள் இடையே எல்லை விவகாரத்தில் தொடர்ந்து மோதல் போக்கு நீடிப்பதை உலக நாடுகள் உற்று கவனித்து வருகின்றன.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
from International https://ift.tt/eakvJbC
via
