சீனாவின் ஹாங்சோவ் நகரில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பர் 23-ம் தேதி கோலாகலமாகத் தொடங்கவுள்ளது. அதற்கு முன்பாக கிரிக்கெட், கால்பந்து, வாலிபால் போன்ற சில விளையாட்டுகளின் தகுதிச்சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அதில் வாலிபாலில் நாக்அவுட் சுற்றுக்குத் தகுதிபெற்றுச் சாதித்திருக்கிறது இந்திய ஆண்கள் அணி.
முதல் போட்டியில் கம்போடியா அணியை 3-0 என்ற செட் கணக்கில் எளிதில் வென்ற இந்திய அணி, இரண்டாவது போட்டியில் நேற்று தென்கொரிய அணியை எதிர்கொண்டது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மூன்று முறை தங்கம் வென்ற அணி தென்கொரியா. கடைசியாக நடந்த 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இதுவரை பங்கேற்ற 14 முறையும் ஏதேனும் ஒரு பதக்கத்தை தென்கொரியா வென்றிருக்கிறது. இப்படியான வலுவான அணியை எதிர்கொண்ட இந்திய அணி, மனம் தளராமல் போராடி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவுசெய்திருக்கிறது. ஐந்து செட்கள் நீண்ட பரபரப்பான போட்டியில் 25-27, 29-27, 25-22, 20-25, 17-15 என்று இந்தியா த்ரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் Pool C-ல் முதலிடம் பிடித்து ரவுண்டு ஆஃப் 12-க்கு நேரடியாகத் தகுதிபெற்றது.
உலகத் தரவரிசையில் 73-வது இடத்தில் இருக்கும் இந்தியா, 27-வது இடத்தில் இருக்கும் தென்கொரியாவை வென்றது வாலிபால் ரசிகர்கள் பலரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. கடைசியாக தென்கொரியாவுடன் மோதிய ஐந்து போட்டிகளிலும் இந்தியா தோல்வியையே தழுவியிருந்தது.
கடைசியாக 1986-ல் சியோலில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் (வெண்கலம்) வென்றிருந்தது இந்திய அணி. 37 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு பதக்கத்தை வென்று சாதிக்குமா எனப் பொறுத்திருந்து பார்ப்போம்!
from International https://ift.tt/5sE9rAM
via
