தற்போதைய உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் இன்னும் சில காரணங்களால் குழந்தையின்மை போன்ற பிரச்னைகள் என்பது கடந்த தலைமுறைகளுடனான ஒப்பீட்டளவில், அதிகரித்த வண்ணமே இருக்கிறது. இத்தகைய சூழலில் கருவுற இயலாத தம்பதிகள் செயற்கை கருவுறுதல் முறையையே பெரிதும் நாடுகின்றனர். இந்த நிலையில் 34 ஆண்டுகளுக்கு முன்பு செயற்கை கருவுறுதல் சிகிச்சையின்போது மருத்துவர் ஒருவர், அவருடைய விந்தணுவைப் பயன்படுத்தியதாக அமெரிக்க பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
அமெரிக்காவின் வாஷிங்டன் பகுதியைச் சேர்ந்தவர் ஷரோன் ஹேய்ஸ் (67). இவர், கடந்த 34 ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய கணவருடன் இயற்கையாகக் கருத்தரிப்பதில் சிரமத்தை சந்தித்து வந்திருக்கிறார். அதையடுத்து கணவரும், மனைவியும், செயற்கை கருவுறுதல் சிகிச்சையை மேற்கொள்ள திட்டமிட்டனர். அதற்காக 1989-ம் ஆண்டு இருவரும் வாஷிங்டனின் ஸ்போகனிலுள்ள மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ நிபுணரான டாக்டர் டேவிட் ஆர்.கிளேபூல்-ஐ நாடினர். சிகிச்சையின்போது தம்பதி, யாரென்று தெரியாத நபரிடமிருந்துதான் விந்தணுவை நன்கொடையாகப் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
தம்பதியினர், நன்கொடையாளரின் முடி மற்றும் கண் நிறம் போன்ற குறிப்பிட்ட பண்புகள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தங்களது விருப்பத்தை வெளிப்படுத்தியிருக்கின்றனர். மருத்துவர் கிளேபூலும் அவர்களின் விருப்பத்தின்படியே நன்கொடையாளர் தேர்வு செய்யப்பட்டு அவர்களின் உடல் நலம் மற்றும் மரபணுக்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என உறுதியளித்திருக்கிறார். இதற்கிடையில் சிகிச்சை ஒவ்வொன்றிற்கும் 100 டாலரைக் கட்டணமாக மருத்துவர் பெற்றிருக்கிறார். சிகிச்சைக்குப் பின்னர் கருவுற்ற ஹேய்ஸ், 1990-ல் ப்ரியான ஹேய்ஸ் என்ற பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
தற்பொழுது 33 வயதாகும் ப்ரியான ஹேய்ஸ், கடந்த ஆண்டு மரபணு சோதனை மற்றும் வம்சாவளியைக் கண்டறிவதற்கான அமெரிக்க இணையதளமான `23andMe' -யில் தனது டி.என்.ஏ-வை சமர்ப்பித்திருக்கிறார். அதன் பின்னர், டாக்டர் கிளேபூல் தான் தனது உயிரியல் தந்தை என்பதையும் அவர் கண்டுபிடித்திருக்கிறார். இதனையறிந்த ஷரோன் ஹேய்ஸ், டாக்டர் கிளேபூல் பொய்யான தகவல்களைக் கூறி ரகசியமாக அவருடைய விந்தணுவைப் பயன்படுத்தி தன்னை கருவுறச் செய்திருப்பதாக ஸ்போகன் கவுண்டி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
from International https://ift.tt/eKmL4Zr
via
