2024- ம் ஆண்டு உலக நாடுகளின் மத்தியில் ஒரு பரபரப்பான சூழ்நிலை உருவாகப்போவதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. அதற்குக் காரணம், அமெரிக்காவில் அதிபர் தேர்தலும், இந்தியாவில் பொதுத்தேர்தலும் நடக்கவிருக்கின்றன. இந்த நிலையில், இந்தியாவில் யார் போட்டியிடுகிறார்கள் என்று ஒரு புறம் அலசினாலும், அமெரிக்காவில் யாரெல்லாம் போட்டியிடுகிறார்கள், குறிப்பாக எத்தனை இந்தியர்கள் போட்டியிடுகிறார்கள் என்று உலக நாடுகள் உற்றுகவனித்து வருகின்றன. இதுவரை 4 இந்தியர்கள் தேர்தலில் போட்டியிடப் போவதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. நிக்கி ஹாலே, ஹிர்ஷ் வர்தன், விவேக் ராமசாமி, சிவா அய்யாதுரை ஆகியோர் தேர்தலில் பங்கேற்கவுள்ளனர்.
தேர்தலில் போட்டியிடப் போவதாக இறுதியாக அறிவித்த சிவா அய்யாதுரை யார்?
தமிழ்நாட்டிலுள்ள ராஜபாளையம் மாவட்டம், முகவூரில் பிறந்த இவர், தனது குடும்ப சூழ்நிலை காரணமாக, மும்பையில் சிறிது காலம் தங்கியிருந்தார். பின்னர் சிவா அய்யாதுரையின் குடும்பம், ஏழு வயதில் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தது. அமெரிக்காவிலுள்ள M.I.T பல்கலைக்கழகத்தில் தனது இளநிலை பட்டத்தைப் பெற்றார் சிவா அய்யாதுரை.
1970-களில் பெண்கள் குறிப்பிட்ட சில துறைகளில் மட்டுமே வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். ஆசிரியர், செவிலியர் போன்ற பணிகள் மட்டுமே மேற்கொண்டனர். நியூஜெர்சியில் இருந்த ஒரு பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த ஒரு பணியாளரின் மேஜையில் ஏராளமான ஆவணங்களும், காகிதங்களும் குவிந்திருந்தன. இதுவே, சிவா அய்யாதுரைக்கு ஒரு சவாலாகக் கொடுக்கப்பட்டது. அதாவது காகிதங்களில் இருக்கும் செய்திகள் மற்றும் விவரங்களை, மின்னணு அமைப்பில் மாற்ற வேண்டும். இதுதான் இவர் இ-மெயில் கண்டுபிடிப்பதற்கான அடிப்படையாக அமைந்தது. பின்னர், 1982- ல் இ-மெயில் கண்டுபிடித்ததற்கான காப்புரிமையை இவர் பெற்றார்.
தற்போது இவர், Cytosolve Inc., என்ற நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாகச் செயலாற்றி வருகிறார். இந்நிறுவனம் ‘அல்செய்மர்ஸ்’ போன்ற நோய்களைக் குணப்படுத்துவதற்கான சிகிச்சைமுறைகளைக் கண்டுபிடித்து வருகிறது. இவருடைய பிரசார இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளபடி, சிவா அய்யாதுரை, EchoMail, CytoSolve மற்றும் Systems Health உள்ளிட்ட ஏழு ஹை-டெக் நிறுவனங்களை நடத்தி வருகிறார்.
சிவா அய்யாதுரை, தனது பிரசாரத்தில், அமெரிக்க மக்களுக்குத் தேவையான பதில்களை வழங்குவதற்காக, இடதுசாரியாகவோ வலதுசாரியாகவோ இல்லாமல் மக்களுக்குச் சேவை செய்ய விரும்புவதாகவும், “நான் 1970-களில் இந்தியாவைவிட்டு அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்ததற்கான காரணம், நாங்கள் அங்கு `தீண்டத்தகாதவர்கள்’ மற்றும் ‘இழிவானவர்கள்’ என்று முத்திரையிடப்பட்டோம்.
அது என்னை மிகவும் பாதித்தது” என்றும் கூறியுள்ளார். மேலும், “தொழில்முனைவோர்கள், அறிவியல் அறிஞர்கள் இணைந்து இந்த நாட்டை நடத்தும்போது அமெரிக்கா மேலும் ஒரு சிறந்த நாடாக வளர்ச்சியடையும். அமெரிக்கா என்று ஒரு நாடு அமைவதற்கு உதவியாக இருந்த நம் முன்னோர்கள், ஒரு புரட்சிகர தேசத்தை உருவாக்கினர். அதில் புதுமை, கல்வி, படைப்பாற்றல் மற்றும் தகுதியின் அடிப்படையில் செழித்து வளர்ந்தது. இதைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், அதை விரிவுபடுத்தவும் நான் கடமைப்பட்டுள்ளேன் என்பதில் உறுதியாக உள்ளேன். இந்த புதிய அமெரிக்கப் புரட்சியில் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்படலாம்” என்று தனது பிரசாரத்தில் கூறியுள்ளார்.
from International https://ift.tt/QFPr0Am
via
