இஸ்ரேல் - பாலஸ்தீன இடையே தொடங்கிய போர், 15 நாள்களைக் கடந்துவிட்டது. காஸாவில் இதுவரை 4,137-க்கும் அதிகமான பாலஸ்தீனர்களும், இஸ்ரேலில் 1,400-க்கும் அதிகமானவர்களும் இந்தப் போரில் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்தப் போரால் காஸா நகரை இஸ்ரேல் முற்றுகையிட்டதால், நகருக்குள் குடிநீர், மின்சாரம், உணவு மற்றும் எரிபொருள்கள் விநியோகம் தடைப்பட்டது. இதனால் தண்ணீர், உணவு, மருந்து பற்றாக்குறையால் அவதிப்படும் காஸா மக்களுக்குத் தேவைப்படும் மனிதாபிமான உதவிகளை செய்ய ஐ.நா-வின் பல்வேறு ஏஜென்சிகள் முடிவு செய்து, அதற்கான உதவிகள் பெறப்பட்டன.
திரட்டப்பட்ட மனிதாபிமான உதவிகளை காஸாவுக்கு கொண்டுசெல்ல எகிப்தின் ராஃபா எல்லை மட்டுமே ஒரே வழி என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, காஸாவாசிகளுக்கான மனிதாபிமான உதவிகளான சுமார் 3,000 டன் உதவி பொருள்கள் விமானம் மூலமாக எகிப்துக்குக் கொண்டுவரப்பட்டு, எகிப்து செஞ்சிலுவைச் சங்கத்துக்குச் சொந்தமான 20-க்கும் அதிகமான லாரிகளில் ஏற்றப்பட்டு, ராஃபா எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, எகிப்திய ஜனாதிபதி அப்துல் ஃபத்தா அல்-சிசி ஆகியோருடன் பல நாள்களாக நடந்த தீவிரப் பேச்சுவார்த்தைகள் மற்றும் ஜோ பைடனுடன் நடந்த உடன்படிக்கைக்குப் பிறகு, தனது கட்டுப்பாட்டின்கீழ் இல்லாத எகிப்தின் ராஃபா பகுதி வழியாக காஸாவுக்குள் நிவாரணப் பொருள்கள் செல்ல இஸ்ரேல் அனுமதித்தது. இதனிடையே, ஐ.நா பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்ரஸ், ராஃபா எல்லைப் பகுதியில் தயார் நிலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிவாரணப் பொருள்களைப் பார்வையிட வெள்ளிக்கிழமை எகிப்துக்குச் சென்றார்.
அப்போது அவர், ``இவை வெறும் லாரிகள் அல்ல, பாலஸ்தீன மக்களின் உயிர்நாடிகள். காஸா மக்களின் நலனுக்காக இன்றியமையாத உதவிகளைத் தொடர்ந்து செய்வதற்கு அனைத்து தரப்பினரும் ரஃபா எல்லையைத் திறந்து வைக்க வேண்டும். ஹமாஸின் கொடூரமான பயங்கரவாதத்திற்கு பாலஸ்தீனிய பொதுமக்கள் பொறுப்பல்ல. எனவே அதன் மோசமான செயல்களுக்காக மக்கள் பாதிக்கப்படக் கூடாது" எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில், தற்போது ராஃபா எல்லை வழியாக காஸாவுக்கு நிவாரணப் பொருள்கள் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன.
from International https://ift.tt/ekmM1JN
via
