அமெரிக்காவின் நியூ ஜெர்சியிலுள்ள நியூ டர்ஹாம் சாலையில் வசித்தவர் ஓம் பிரம்பட் (23). குஜராத்தைச் சேர்ந்த இவர், அமெரிக்காவில் படித்து வருகிறார். ஓம் பிரம்பட்டுடன் அவரின் தாத்தா-பாட்டியான திலிப்குமார் பிரம்பட் (72), பிந்து பிரம்பட் (72), மாமா யஷ்குமார் பிரம்பட் (38) ஆகியோர் வசித்து வந்தனர். இந்த நிலையில், ஓப் பிரம்பட் வீட்டிலிருந்து துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்பதாக, அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்திருக்கின்றனர்.
உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள், திலிப்குமார் பிரம்பட், பிந்து பிரம்பட் ஆகியோரை சடலமாக மீட்டனர். யஷ்குமார் பிரம்பட்டை பலத்தக் காயமடைந்த நிலையில் மீட்டு, மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். தாத்தா-பாட்டி, மாமா ஆகியோர்மீது துப்பாக்கிச்சூடு நடத்தி, அவர்களைக் கொன்ற குற்றத்துக்காக ஓம் பிரம்பட் கைதுசெய்யப்பட்டார். அவரிடமிருந்து துப்பாக்கி ஒன்றையும் காவல்துறையினர் பறிமுதல் செய்து, விசாரணை மேற்கொண்டனர்.
தன்னுடைய உறவினர்களைச் சுடுவதற்குப் பயன்படுத்திய துப்பாக்கியை ஆன்லைனில் வாங்கியதாகத் தெரிவித்த ஓம் பிரம்பட், எதற்காகக் கொலைசெய்தார் என்பதை தெரிவிக்க மறுத்துவிட்டார். அவரிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பாகப் பேசிய ஓம் பிரம்பட் வீட்டுக்கு அருகில் வசிப்பவர்கள், ``திடீரென துப்பாக்கிச் சத்தம் கேட்டதால், காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தோம். இதற்கு முன்னரே அந்த வீட்டுக்குள் குடும்பத் தகராறு நடந்தது, ஞாபகம் இருக்கிறது. அப்போதே காவல்துறையும் வந்தது.
அதன் பிறகு, ஓம் பிரம்பட் மட்டும் சில மாதங்கள் வேறு ஓர் இடத்தில் தனியே தங்கியிருந்தான். குடியிருப்பு முழுவதும் கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. எனவே, அதை ஆய்வு செய்தாலே குற்றம் குறித்த அதிக தகவல்கள் கிடைக்கும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
from International https://ift.tt/6aVJnM3
via
