இனி 18 வயதுக்குக் கீழுள்ள குழந்தைகள் ஒரு வாரத்துக்கு அதிகபட்சமாக மூன்று மணிநேரம் வரை மட்டுமே ஆன்லைன் வீடியோ கேம் விளையாட அனுமதிக்கப்படுவர் என்று சீன அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சீனாவைப் பொறுத்தவரையில் தற்போது 18 வயது நிரம்பாத 110 மில்லியன் குழந்தைகள் ஆன்லைன் வீடியோ கேம்களை விளையாடி வருகின்றனர். இப்படி சதா சர்வகாலமும் ஆன்லைன் வீடியோ கேம்களில் மூழ்கிக்கிடப்பதால் அவர்களின் உடல்நலம் பாதிக்கப்படுவதோடு மனநலமும் அதிக அளவில் பாதிக்கப்படுகிறது என்றும், இதனால்தான் இந்த மிக முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் சீனாவின் `தேசிய பத்திரிகை மற்றும் வெளியீட்டு நிர்வாகம்’ (National Press and Publication Administration) வெளியிட்டுள்ள விதிமுறைகள் அடங்கிய செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: `இனி தம்பதிகள் 3 குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ளலாம்!' - சீனாவின் முடிவுக்கு காரணம் என்ன?
இனி வார இறுதி நாள்களிலும், அரசு விடுமுறை நாள்களிலும் இரவு 8 மணி முதல் 9 மணிவரை 18 வயது வரைக்குமான குழந்தைகள் ஆன்லைன் கேம்ஸ் விளையாட அனுமதிக்கப்படுவர் என்றும் அந்தச் செய்திக் குறிப்பு மேலும் தெரிவிக்கிறது.
சீன அரசின் இந்த முடிவு, டென்சென்ட் (TENCENT), நெட்ஈஸ் (NetEase) போன்ற புகழ்பெற்ற ஆன்லைன் வீடியோ கேம்ஸ் தயாரிப்பு நிறுவனங்களுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. குறிப்பாக ஆன்லைன் கேம்ஸ் சார்ந்து விதிக்கப்பட்டுள்ள இந்தப் புதிய கட்டுப்பாடுகள் சீனாவின் தொழில்நுட்பம் சார்ந்த பங்கு வர்த்தகத்தின் தலையெழுத்தையே புரட்டிப் போட்டுவிடக்கூடும் என்றும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
தாங்கள் கொண்டுவந்துள்ள இந்தக் கட்டுப்பாடுகள் மற்றும் விதிகள் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, ஆன்லைன் வீடியோ கேம்ஸ் சேவையை வழங்கும் நிறுவனங்களுக்கும்தான் என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லியுள்ள அந்நாட்டு அரசு, வார இறுதி நாள்கள் மற்றும் விடுமுறை நாள்களில் குழந்தைகள் ஆன்லைன் கேம்ஸ் விளையாடும்போது அவர்கள் நேர வரையறையை சரியாகப் பின்பற்றுகிறார்களா என்பதை ஆன்லைன் வீடியோ கேம்ஸ் சேவை நிறுவனங்கள் கண்காணித்து அதற்கேற்ப செயல்படவேண்டும் என்றும் கூறியுள்ளது.
மிகக் குறிப்பாக, 18 வயதுக்குக் கீழ் இருக்கும் குழந்தைகள் ஆன்லைன் வீடியோ கேம்ஸ் விளையாடுவதற்காக LOG IN செய்யும்போது தங்களது உண்மையான பெயரில் உள் நுழைகிறார்களா என்பதை சரிபார்க்கவேண்டியது மிகமிக அவசியம். இதன் மூலம் வெவ்வேறு யூஸர் நேம்களில் குழந்தைகள் உள்நுழைவதைத் தடுக்கமுடியும் என்றும் சீன அரசு ஆன்லைன் வீடியோ கேம்ஸ் சேவை நிறுவனங்களை அறிவுறுத்தியுள்ளது.
Also Read: ஆன்லைன் கேமிங்: கொரோனாவால் மக்களுக்குக் கிடைத்த வரமா சாபமா?
இப்படி சீன அரசு ஆன்லைன் வீடியோ கேம்ஸ் சார்ந்த விதிமுறைகளை வெளியிடுவது இது முதல் முறையல்ல. 18 வயதுக்குக் கீழுள்ள குழந்தைகள் ஒரு நாளில் அதிகபட்சமாக ஒன்றரை மணிநேரம் மட்டுமே ஆன்லைன் கேம்ஸ் விளையாட வேண்டும் என்று அது 2019-ம் ஆண்டே குழந்தைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
from International https://ift.tt/3BDWph8
via
