ஆப்கனிலிருந்து அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேறி விட்ட நிலையில், காபூல் விமான நிலையத்தில் அமெரிக்கப் படைகளுக்குச் சொந்தமான ஆயுதங்களுடன் தாலிபன்கள் உலா வரும் வீடியோவும், அமெரிக்காவுக்குச் சொந்தமான விமானம் ஒன்றில் மனித உடல் ஒன்றினை தொங்கவிட்ட படி விமானத்தை இயக்கியதாகக் கூறப்படும் வீடியோவும் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
என்ன நடக்கிறதே அங்கே..?
அல்-கொய்தா பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த விவகாரத்தில் தாலிபன்களை வேரறுக்கும் நோக்கத்தில் 2001-ல் ஆப்கனில் நுழைந்த அமெரிக்கப் படைகள் சுமார் 20 ஆண்டுகாலமாக ஆப்கானிஸ்தானில் அந்நாட்டு அரசுடன் இணைந்து பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இருப்பினும், தாலிபன்களை முழுமையாக ஒழிக்க முடியாமல் போனதால், தாலிபன் விவகாரத்தை தற்போது கண்காணித்து வரும் அமெரிக்காவின் 4-வது அதிபர் ஜோ பைடன் அண்மையில் தங்களது படைகளை முற்றிலுமாக திரும்பப் பெறும் முடிவில் உறுதியாக இருந்தார்.
அதன்படி, ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியதும் 20 வருடங்களாக அமெரிக்கப் படைகளின் அதிநவீன ஆயுதங்கள் மற்றும் போர் விமானங்களைக் கண்டு அஞ்சி அடங்கிப் போயிருந்த தாலிபன்கள் மீண்டும் ஆப்கானின் நகரங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கைப்பற்றத் துவங்கினர். இதுவரை அமெரிக்கப் படைகளின் ஆதரவுடன் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்து ஆப்கன் ராணுவத்தினர் அமெரிக்கப் படைகளின் ஒத்துழைப்பு இல்லாமல் பலத்த பின்னடைவைச் சந்தித்தனர். ஆயுத ரீதியாக பலம் பொருந்திய தாலிபன்களை எதிர்கொள்ள முடியாமல் ஆப்கன் மக்களைக் கையறுநிலையில் விட்டு விட்டு, முழுமையாக வெளியேறினார்கள்.
கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி அன்று ஆப்கன் தலைநகர் காபூலைக் கைப்பற்றிய தாலிபன்கள் ஆப்கானிஸ்தானை 'இஸ்லாமிக் எமிரேட்ஸ் ஆஃப் ஆப்கானிஸ்தான்' என்று பெயர் மாற்றம் செய்து அந்நாட்டை முழுமையாக தங்கள் ஆளுகைக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், அமெரிக்கா தங்கள் வீரர்கள் ஆப்கனில் இருந்து வெளியேற ஆகஸ்ட் 31-ம் தேதி வரை கால அவகாசம் கொடுத்திருந்ததால், மீட்புப் பணிகளின் காரணமாகத் தலைநகர் காபூலில் விமான நிலையம் மட்டும் அமெரிக்கப் படைகளின் கட்டுப்பாட்டில் நேற்று வரை இருந்து வந்தது. தாலிபன்கள் காபூலைக் கைப்பற்றும் போதே 90 சதவீத அமெரிக்கப் படைகள் அங்கிருந்து வெளியேறி விட்ட நிலையில், மீதமிருந்தவர்களும் அவசர கதியில் வெளியேறினார்கள். அமெரிக்கா, இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளும் தங்கள் குடிமக்களை ஆப்கானிலிருந்து விமானங்களை அனுப்பி மீட்டன. கூடவே, தாலிபன்களுக்கு அஞ்சி பிற நாடுகளுக்கு அகதிகளாகப் பயணப்பட்டனர் ஆப்கனின் பூர்வ குடிமக்கள்.
Also Read: ஆப்கன்: வெளியேறிய கடைசி அமெரிக்க ராணுவ வீரர்... `முழுச் சுதந்திரம்' என தாலிபன்கள் அறிவிப்பு!
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்தது போலவே அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து முழுமையாக நேற்றைய தினம் வெளியேறின . இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ``ஆப்கானிஸ்தானில் எங்கள் 20 வருட ராணுவ இருப்பு முடிந்துவிட்டது. கடந்த 17 நாள்களில் எங்கள் ராணுவ, விமானப் படைகள் அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய விமானப் போக்குவரத்தை இயக்கி, சுமார் 1,20,000 அமெரிக்கக் குடிமக்கள், நட்பு நாடுகளின் குடிமக்கள், அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான் நட்புறவாளர்கள் முதலியவர்களை வெளியேற்றின” என்றார். தொடர்ந்து, ஆப்கானிஸ்தானைவிட்டு வெளியேற விரும்புவர்களுக்கு தாலிபன்கள் அனுமதி தர வேண்டும் என்று பைடன் கேட்டுக்கொண்டார்.
அமெரிக்கப் படையினரின் கடைசி ராணுவ விமானம் வெளியேறிய பின்னர், அங்கு நுழைந்த தாலிபன்கள் விமான நிலையத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்தனர். ஆப்கனில் 20 வருடங்களாக முகாமிட்டிருந்த அமெரிக்கப் படைகள் வெளியேறியதை அடுத்து, தாலிபன்கள் உற்சாக மிகுதியில் வானத்தை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டும், வான வேடிக்கைகளை நடத்தியும் குதூகலித்தனர். அதே போல், அவசர கதியில் ஆப்கனிலிருந்து வெளியேறிய அமெரிக்கப் படைகள் சினூக் ஹெலிகாப்டர்கள், ஹம்வீ வாகனங்கள், ஏவுகணை எதிர்ப்பு தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட ராணுவத் தளவாடங்களை அங்கேயே விட்டுச் சென்றனர். அமெரிக்கப் படைகள் விட்டுச் சென்ற ஆயுதங்களைக் கையில் ஏந்திய படி காபூல் விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சினூக் ஹெலிகாப்டர்களை பார்வையிட்டபடி தாலிபன்கள் சுதந்திரமாக உலா வரும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகின.
#Taliban fighters enter a hangar in #Kabul Airport and examine #chinook helicopters after #US leaves #Afghanistan. pic.twitter.com/flJx0cLf0p
— Nabih (@nabihbulos) August 30, 2021
நவீன ஆயுதங்கள் மற்றும் விமானங்கள் உள்ளிட்டவற்றை தாலிபன்கள் பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக அங்கேயே விட்டுச் சென்றது குறித்து அமெரிக்கா மீது பல்வேறு உலக நாடுகளும் விமர்சனங்களை முன்வைத்தன. அதையடுத்து, ஆப்கனில் ராணுவத் தளவாடங்களை விட்டுச் சென்றது குறித்து விளக்கமளித்த தாலிபன் எதிர்ப்பு படையின் தளபதி கென்னத் மெக்கன்சி, "குறிப்பிட்ட கால நேரத்திற்குள் நாடு திரும்ப வேண்டிய கட்டாயம் எங்கள் படைகளுக்கு இருந்தது. போதிய நேரமில்லாமல் போனதால் எங்கள் ராணுவத் தளவாடங்களை அங்கேயே விட்டு வர வேண்டியதாக இருந்தது.
இருப்பினும், தாலிபன்கள் எங்களின் ஆயுதங்கள் மற்றும் விமானங்களை அந்நாட்டு மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தக் கூடும் என்பதால் ஆப்கானிலிருந்து வெளியேறுவதற்கு முன்பாக, காபூல் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எங்களின் 73 ராணுவ விமானங்களைச் செயலிழக்கச் செய்து விட்டோம். இனி அவற்றை நிரந்தரமாகப் பயன்படுத்த முடியாது. அவை ஒருபோதும் பறக்காது. அவற்றை யாராலும் பறக்க வைக்கவும் முடியாது. அதே போல, ஏவுகணை எதிர்ப்பு தொழில்நுட்பத்தையும், 27 ஹம்வீ வாகனங்களையும் , 74 MRAP கவச வாகனங்களையும் நிரந்தரமாகப் பயன்படுத்த முடியாத வகையில் செயலிழக்கச் செய்திருக்கிறோம்" என்றார்.
அதைத் தொடர்ந்து பென்டகன் தரப்பிலிருந்து வெளியான அறிக்கை ஒன்றில், பென்டகன் ஆப்கானில் சுமார் 70 MRAP கவச வாகனங்களை விட்டுச் சென்றுள்ளதாகவும், அவை ஒவ்வொன்றும் 1 மில்லியன் டாலர் மதிப்புள்ளவை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதே போல், அமெரிக்காவின் GAO அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்கா 2001 செப்டம்பர் மாதம் முதல் முதல் 2021 ஆகஸ்ட் மாதம் வரை ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக சுமார் 83 பில்லியன் அமெரிக்க டாலர்களைச் செலவழித்திருப்பதாகவும், இந்தாண்டு மட்டும் ஆப்கன் படைகளுக்கான பயிற்சி மற்றும் உபகரணங்களுக்காக 3 பில்லியன் டாலர்கள் செலவழித்திருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறது.
Also Read: ஆப்கன்: `தாலிபன்களை அலறவிடும் கோராசன் பயங்கரவாதிகள் யார்?!' - அவர்களின் பின்னணி என்ன?
காபூல் விமான நிலையத்தில் அமெரிக்கப் படைகள் விட்டுச் சென்ற ஆயுதங்களுடன் தாலிபன்கள் உலா வந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி அனைவரையும் பதறச் செய்த நிலையில், அமெரிக்கா தரப்பில் ராணுவத் தளவாடங்கள் செயலிழக்கச் செய்து விட்டதாக வெளிவந்த அறிவிப்பு சற்றே ஆப்கன் விவகாரத்தில் அனைவரையும் ஆசுவாசப்படுத்தியது. இருப்பினும், தங்கள் ஆயுதங்கள் மற்றும் விமானங்களை தாலிபன்களால் ஒருபோதும் இயக்க முடியாது என்று அமெரிக்கா திட்டவட்டமாகக் கூறியிருந்த நிலையில், நேற்றைய தினம் தாலிபன்கள் அமெரிக்க விமானப்படைக்குச் சொந்தமான உயர்ரக ஹெலிகாப்டர் ஒன்றில் மனித உடல் ஒன்றினை தொங்கவிட்ட படி இயக்கியதாக வீடியோ ஒன்று வெளியாகி மீண்டும் உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது.
If this is what it looks like… the Taliban hanging somebody from an American Blackhawk… I could vomit. Joe Biden is responsible.
— Liz Wheeler (@Liz_Wheeler) August 30, 2021
pic.twitter.com/muHLEi3UvK
தாலிபன் தலைமையிலான இஸ்லாமிக் எமிரேட்ஸ் ஆஃப் ஆப்கானிஸ்தானின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு என்று கூறப்படும் 'Talib-Times' என்ற ட்விட்டர் பக்கத்தில், "இதோ எங்கள் விமானப்படை. இந்த நேரத்தில், இஸ்லாமிக் எமிரேட்ஸின் விமானப்படை ஹெலிகாப்டர்கள் ஆப்கனின் கந்தஹார் நகரத்தின் மீது பறந்து தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது" என்று குறிப்பிடப்பட்டு அந்த வீடியோ பகிரப்பட்டிருந்தது.
இந்த நிலையில், ஹெலிகாப்டரின் தொங்கவிடப்பட்டிருப்பது மனித உடல் இல்லை என்றும், அது உயிருடன் இருக்கும் தாலின்பன் ஒருவர் தான் என்றும் கூறப்படுகிறது. வீடியோவின் குறிப்பிட்ட ஒரு இடத்தில், அந்த நபர் தரையில் இருக்கும் மக்களை நோக்கி கை அசைப்பதும் பதிவாகி உள்ளது என ஃபேக்ட் செக் தளங்கள், மேலும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
What appears to be a zoomed in version of a viral video of a man dangling from a helicopter in Afghanistan shows him moving and waving. This, along with other photos of a similar scene, dispel the online narrative that he was hanged by the Taliban https://t.co/BYNVsGcBye
— Reuters Fact Check (@ReutersFacts) August 31, 2021
குறிப்பிட்ட வீடியோ ட்விட்டரில் பகிரப்பட்ட சில நிமிடங்களிலேயே சர்வதேச பத்திரிகையாளர்கள் பலரும் தங்கள் பக்கங்களில் பகிர்ந்து வைரலாக்கினார்கள். 'Talib-Times' என்ற கணக்கிலிருந்து முதலில் வெளியான இந்த வீடியோ சிறிது நேரத்திலேயே ட்விட்டர் நிறுவனத்தால் நீக்கப்பட்டு, அந்த கணக்கும் முடக்கப்பட்டது. அமெரிக்கா, ராணுவத் தளவாடங்களை தங்கள் படையினர் முற்றிலுமாக செயலிழக்கச் செய்து விட்டதாகக் கூறி வரும் வேளையில், அமெரிக்காவுக்குச் சொந்தமான அதிநவீன பிளாக்ஹாக் ஹெலிகாப்டரை தாலிபன்கள் இயக்கும் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Also Read: ஆப்கன் பாடகரின் வேதனை: `ஓ... என் தாயகமே...' - இணையத்தில் வைரலாகும் பாடல்
from International https://ift.tt/38r0usK
via
