கடந்த ஜனவரி 19-ம் தேதி, எமர்சன், மனிடோபாவில், கனடா - அமெரிக்கா எல்லையிலிருந்து 12 மீட்டர் தூரத்தில், ஒரு ஆண், ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகளின் உடல்கள் பனியில் உறைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன. இவர்கள் நான்கு பேரும் இந்தியாவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் என்பது போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
நேற்று முன் தினம் இவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு போலீஸாரால் உறுதிசெய்யப்பட்டன. விசாரணையில், உயிரிழந்தவர்கள் குஜராத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் பல்தேவிபாய் படேல் (39), வைஷாலிபென் ஜெகதீஷ்குமார் படேல் (37), விஹாங்கி ஜெகதீஷ்குமார் படேல் (11), தார்மிக் ஜெகதீஷ்குமார் படேல் (3) என்று தெரியவந்தது.
இந்த இந்திய குடும்பத்தினரின் இறப்புக்குக் காரணம் ஆள் கடத்தல் கும்பல்களாகவே இருக்கவேண்டும் என்று கனடா காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக கனடா போலீஸார் கூறுகையில், ``கடந்த ஜனவரி 12-ம் தேதி கனடாவின் டொரொண்டோ நகரை வந்தடைந்த இந்தக் குடும்பம், அங்கிருந்து, ஜனவரி 18-ம் தேதி எமர்சனை சென்றடைந்திருக்கிறது.
இறந்தவர்களின் சடலங்களுக்கு அருகிலோ, அல்லது சிறு தொலைவிலோ கூட எந்த ஒரு வாகனமும் இல்லை. எனவே, யாரோ அவர்களை இவ்வளவு தூரம் நாட்டின் எல்லை வரை கொண்டுவந்து இறக்கிவிட்டுவிட்டு, பின்பு சம்பவ இடத்தை விட்டுச்சென்றுள்ளதையே காட்டுகிறது. எங்களுக்குத் தெரிந்தவரை கனடாவில் நடக்கும் சம்பவங்களையும், சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த கைதுகளையும் வைத்துப் பார்த்தால், இது ஆள்கடத்தல் கும்பல்களின் வேலையாகத்தான் இருக்கும் என்று சந்தேகிக்கிறோம்.
மேலும், இந்த குடும்பம் ஒரு சில நாள்கள் கனடாவின் பல இடங்களில் சுற்றித் திரிந்திருக்கிறது. அந்த சமயத்தில் இவர்களுடன் யாருக்காவது தொடர்பு ஏற்பட்டு, பின்னர் அவர்களால் கொலை செய்யப்பட்டார்களா என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறோம்" என்றனர்.
கடந்த ஜனவரி 19-ம் தேதி, கனடாவில் படேல் குடும்பத்தினரின் சடலங்கள் கண்டறியப்பட்ட அதே நாள், அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த இரண்டு இந்தியர்களை நாடு கடத்தியதற்காக ஸ்டீவ் ஷந் என்ற நபர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். ஸ்டீவ் ஷந், முறையான ஆவணங்களின்றி அமெரிக்காவில் இருக்கும் வெளிநாட்டினரைக் கடத்தும் ஒரு ஆள்கடத்தல்காரன் எனக் கூறும் போலீஸார், இந்த இந்திய குடும்பத்தினரையும் அந்த நபரே கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.
இந்தியாவைச் சேர்ந்தவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, இருநாட்டு அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக இந்தியத் தூதரகம், ``கனடாவுக்கு அதிக அளவில் இந்திய மாணவர்களும், இந்தியாவை விட்டு இடம்பெயர்ந்து கனடாவில் குடியேறுபவர்களும் வருகிறார்கள். இவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய இரு நாடுகளும் இணைந்து பணியாற்ற வேண்டும்" என்று அறிக்கை வெளியிட்டியிருக்கிறது.
Also Read: மைனஸ் 35 டிகிரி செல்சியஸ்... அமெரிக்கா - கனடா எல்லையில் உறைந்த நிலையில் 4 இந்தியர்களின் உடல்கள்!
from International https://ift.tt/3sheQFJ
via
