அமெரிக்காவின் மேற்கு வெர்ஜீனியாவில் ஒரு அபார்ட்மெண்ட் வளாகத்தில் பிறந்த நாள் மற்றும் பட்டமளிப்பு விழா இரண்டையும் ஒருங்கிணைத்துக் கொண்டாட பார்ட்டி ஒன்று நடந்திருக்கிறது. கடந்த புதன்கிழமை இரவு நடந்த இந்த பார்ட்டியில் திடீரென நுழைந்த மர்மநபர் ஒருவர், தன்னிடமிருந்த `AR-15 Rifle' வகைத் துப்பாக்கியை வைத்துக் கூட்டத்தை நோக்கிச் சுடத் தொடங்கியிருக்கிறார். அதைக் கண்டு அங்கிருந்தவர்கள் அனைவரும் அச்சத்தில் உறைய, கூட்டத்திலிருந்த பெண் ஒருவர் சற்றும் தயங்காமல் தன்னிடமிருந்த பிஸ்டலை வைத்து அந்த நபரைச் சுட்டிருக்கிறார். அதில் அந்த நபர் காயமடைந்து உயிரிழந்தார். இந்த துப்பாக்கிச்சூடு காரணமாக அங்கிருந்தவர்கள் கலைந்து ஓடினார்கள். பின்னர் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தார்கள். இதில், அதிர்ஷ்டவசமாக பார்ட்டியில் கலந்துகொண்ட யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.
பார்ட்டியில் கலந்துகொண்டவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்ட அந்த நபரைச் சுட்ட பெண்ணிடம் போலீஸார் சம்பவ இடத்தில் வைத்தே விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவருக்கு ஆதரவாக அங்கிருந்தவர்கள் நடந்தவற்றை விவரித்தனர். அதையடுத்து காவல்துறையினர் அந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில், உயிரிழந்த நபர் 37 வயதான டெனிஸ் பட்லர் என்பது தெரியவந்து. பட்லர் பார்ட்டி நடந்த நாளன்று மாலை நேரத்தில் அந்த அபார்ட்மெண்ட் வளாகத்தில் தென்பட்டிருக்கிறார்.
வேகமாக வண்டியை இயக்கியதால், அபார்ட்மெண்டில் இருந்தவர்கள், ``இது குழந்தைகள் விளையாடும் பகுதி, அதனால் வாகனத்தை வேகம் குறைவாக இயக்குங்கள்" எனக் கூறியிருக்கின்றனர். அதையடுத்து, அங்கிருந்து சென்றவர் பார்ட்டி நடக்கும் சமயத்தில் மீண்டும் வந்து கூட்டத்தை நோக்கிச் சுடத் தொடங்கியிருக்கிறார்.
இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர், ``பிரச்னை ஏற்பட்டதும் ஓடாமல் துரிதமாகச் செயல்பட்டு அந்தப் பெண் பலரின் உயிரைக் காப்பாற்றியிருக்கிறார். அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. அவரின் செயல் பாராட்டத் தகுந்தது. உயிரிழந்த டெனிஸ் பட்லர் குற்றப்பின்னணி உடையவர். அவர் சிலமுறை சிறைக்கும் சென்று திரும்பியிருக்கிறார். அவர் சட்டவிரோதமாகத் துப்பாக்கி வைத்திருந்ததும் தெரியவந்திருக்கிறது" என ஊடகங்களிடம் தெரிவித்தார்.
from International https://ift.tt/QJeIVK0
via
