கர்நாடக மாநில சட்டமன்றத்தின் எதிர்கட்சித் தலைவரான சித்தராமையா, கடந்த சில தினங்களுக்கு முன்பு, ``நேருவுடன் மோடியை ஒப்பிடமுடியாது" எனக் கூறியிருந்தார். இந்த நிலையில், சித்தராமையாவின் இத்தகைய பேச்சுக்கு, முதல்வர் பசவராஜ் பொம்மை, ``நிச்சயமாக மோடியை நேருவுடன் ஒப்பிடமுடியாது, இந்தியாவை வலிமையாக்கியதே மோடிதான்" என பதில் கூறியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பசவராஜ் பொம்மை, ``நிச்சயமாக மோடியை நேருவுடன் ஒப்பிடமுடியாது. சீனாவின் படையெடுப்பின்போது, நேரு சரியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை அதுமட்டுமல்லாமல் இந்திய மண்ணையும் அவர் விட்டுக்கொடுத்தார். ஆனால், மோடி சீனாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராகப் பல வலுவான நடவடிக்கைகளை எடுத்து இந்திய மண்ணைக் காப்பாற்றினார்.
மேலும், பாகிஸ்தானுடன் மோடி சமரசம் செய்து கொள்ளவில்லை. இந்தியாவின் ஒற்றுமைக்காகவே உழைத்தவர் மோடி. இதுபோன்று பல உதாரணங்கள் உள்ளன. முக்கியமாக இந்தியாவை வலிமையாக்கியதே மோடிதான்" என்றார்.
தொடர்ந்து சித்தராமையா குறித்துப் பேசிய பசவராஜ் பொம்மை, ``சித்தராமையா எங்கிருந்து வந்தார் என்று நான் கேட்க விரும்புகிறேன். அவர் திராவிடரா அல்லது ஆரியரா? இதற்கு முதலில் அவர் பதில் சொல்லட்டும்" எனக் கடுமையாகச் சாடினார்.
from International https://ift.tt/rwYEch6
via
