மக்கள்தொகை பெருக்கத்துக்கு ஏற்றாற்போல இறைச்சிக்கான தேவையும் அதிகரித்து வருகிறது. இறைச்சி உண்பவர்களில் சிலருக்கு கால்நடைகள், கோழிகள் போன்றவற்றை மனிதரின் உணவுத் தேவைக்காக வெட்டுவது பிடிப்பதில்லை. இவர்களைப் போன்றோருக்காகவும், எதிர்காலத்தில் இறைச்சித் தேவையைப் பூர்த்தி செய்யவும் ஆய்வகங்களில் கோழி மற்றும் விலங்குகளின் தசைகளில் இருந்து எடுக்கப்படும் செல்களை வைத்து செயற்கையான முறையில் இறைச்சி உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆய்வகத்தில் வளர்க்கப்படும் இந்த இறைச்சி விரைவில் மனித பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத்தப்படும் என அமெரிக்க நிறுவனமான குட் மீட் (Good Meat) தெரிவித்துள்ளது.
இதற்கென உலகின் பெரிய உயிரியல் தொழில்நுட்ப சாதன ஆய்வுக்கூடம் நிறுவப்படும் என்றும் குட் மீட் (Good Meat) நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, `பல்லாயிரக்கணக்கான கடைகள் மற்றும் உணவகங்களுக்கு இறைச்சிகளை வழங்க முடியும். இந்த முயற்சி தொழில்துறையில் `கேம்சேஞ்சர்' ஆக இருக்கலாம்' என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இதன் மூலம் ஆண்டுதோறும் 13,000 டன்கள் வரை கோழி மற்றும் மாட்டிறைச்சியை வளர்க்க முடியும் என குட் மீட் (Good Meat) தெரிவித்துள்ளது. முட்டைகள் அல்லது செல் வங்கிகளில் இருந்து பெறப்படும் செல்கள் மூலம் இறைச்சி வளர்க்கப்படுவதால் எந்த உயிரினமும் இறைச்சிக்காகக் கொல்லப்பட வேண்டிய தேவை இருக்காது.
உலகெங்கிலும் உள்ள சுமார் 170 நிறுவனங்கள் இந்த செயற்கை இறைச்சி வளர்ப்பு வேலையில் ஈடுபட்டிருக்கின்றன. ஆனால், குட் மீட் நிறுவனம் மட்டுமே அதன் தயாரிப்புகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்வதற்கான ஒழுங்குமுறை அனுமதியைப் பெற்றுள்ளது. டிசம்பர் 2020-ம் ஆண்டிலிருந்து இந்நிறுவனம் ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட கோழியை சிங்கப்பூருக்கு வழங்கத் தொடங்கியது.
from International https://ift.tt/WKzp7YC
via
