அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலிருக்கும் தொடக்கப்பள்ளி ஒன்றில், 18 வயதான சால்வடார் ராமோஸ் என்ற இளைஞர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். அதில் 19 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக, அமெரிக்க வெள்ளை மாளிகையில் அரைக்கம்பத்தில் கொடி பறக்கவிடப்பட்டது.
இந்த நிலையில், துப்பாக்கிச்சூட்டில் சாதுர்யமாகச் செயல்பட்டு உயிர் பிழைத்த சிறுமி குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியிருக்கின்றன. சம்பவ தினத்தன்று அந்த இளைஞர் துப்பாக்கிச்சூடு நடத்தியபோது மிஹா என்ற சிறுமி தன் நண்பர்களுடன் வகுப்பறையில் இருந்திருக்கிறார். அப்போது மிஹாவின் தோழியை அந்த இளைஞர் துப்பாக்கியால் சுட்டார். அதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார். அதைக் கண்டு பயந்துபோன மிஹா செய்வதறியாது திகைத்துப் போய் நின்றிருந்திருக்கிறார்.
அதையடுத்து, உயிர் பிழைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், இறந்த தன் தோழியின் உடலிலிருந்த ரத்தத்தை எடுத்து தன் உடலில் பூசிக்கொண்டு, உயிரிழந்து விட்டதுபோல நடித்திருக்கிறார். சிறுமி மிஹா உயிரிழந்து விட்டதாகக் கருதிய அந்த இளைஞர், அங்கிருந்து வெளியேறியிருக்கிறார். அதன் பின்னர், மிஹா போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்ததும் எழுந்தார். போலீஸார் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்திருக்கின்றனர்.
மரணத்தின் விளிம்பிலிருந்து சாதுர்யமாக உயிர் பிழைத்த சிறுமியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
from International https://ift.tt/qo9zDPR
via
