ஈரானில், கடந்த 13ம் தேதி, மஹ்சா அமினி என்ற 22 வயது பெண், தனது தலையில் ஹிஜாபை மிகவும் தளர்வாக அணிந்திருந்தாக குற்றம்சாட்டப்பட்டு, காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் மர்மமான முறையில் இறந்தார். காவல்துறையினரால் அமினி தாக்கப்பட்டதாகவும், அதில் பலத்த காயமடைந்த அவர், கடந்த 16-ம் தேதி உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
அதே நேரம், காவல்துறையினர் தாக்கியதால்தான் அமினி உயிரிழந்ததாக பரவி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும், காவல் நிலையத்தில் விசாரணையின் போது மாரடைப்பு ஏற்பட்டு அமினி தரையில் விழுந்து கோமா நிலைக்கு சென்று தான் உயிரிழந்தார் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, அமினியின் இறுதிச் சடங்கு கடந்த 17-ம் தேதி அவரது சொந்த ஊரான குர்திஷ் பிராந்தயத்தின் சாகேஸ் நகரத்தில் நடைபெற்றது. அமினியின் இறுதிச் சடங்குகள் முடிவடைந்தப் பின், குர்திஷ் பிராந்தியப் பெண்கள் பலர், நகரத்தின் வீதிகளில் இறங்கி ஹிஜாப் தொடர்பான ஈரானிய சட்டங்களுக்கு எதிராகவும், காவல்துறையினரை கண்டித்தும் போராடி வருகின்றனர்.
போராட்டங்களின்போது, ஈரானிய பெண்கள் தங்களது கேசத்தை வெட்டி போர்க்கொடி போல் கம்பங்களில் ஏற்றி, அரசுக்கு எதிரான கலகக் குரல்களை வலுவாக்கினர். தாங்கள் அணிந்திருந்த ஹிஜாப்களை காற்றில் சுழற்றி, அவற்றுக்கு தீயிட்டு எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி, உலக நாடுகளின் பார்வையை ஈரான் வசம் திருப்பி உள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் 80-க்கும் மேற்பட்ட ஈரானிய நகரங்களில் நீடித்து வரும் போராட்டங்களுக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. பெண்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஆண்களும் களம் கண்டுள்ளனர். அவர்களை ஒடுக்க, காவல்துறையினரும் ராணுவத்தினரும் ஈரானிய அரசால் களமிறக்கப்பட்டுள்ளனர். தாக்குதலில் இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாகவும், இவர்களில் ஐந்துக்கும் குறைவானரே பாதுகாப்பு படையினர் எனவும், ஈரான் மனித உரிமை அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. குறிப்பாக, கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடந்த போராட்டத்தில் சுமார் 35 பேர் கொல்லப்பட்டுள்ளதாக, மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.
இதனிடையே, நாட்டில் நடைபெற்று வரும் போராட்டங்களை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும், நாட்டின் பாதுகாப்பு மற்றும் அமைதியை எதிர்ப்பவர்களை தீர்க்கமாக கையாள வேண்டும் எனவும் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி சனிக்கிழமை அன்று தெரிவித்துள்ளார். அதற்கேற்ப, சமூக வலைதளங்கள் மூலம் பரவும் போராட்டங்கள் தொடர்பான செய்திகள் மூலம் ஏற்படும் கலவரங்களை ஒடுக்க, இணைய துண்டிப்பை ஈரானிய அரசு செயல்படுத்தி வருகிறது.
இதனிடயே, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன், அரசின் இணைய சேவை முடக்கத்தை ஈரான் மக்கள் சமாளிக்கும் பொருட்டு, இணையச் சுதந்திரத்தை மேம்படுத்துவது மற்றும் ஈரானிய மக்களுக்கு இலவச இணையச் சேவைகள் வழங்குவது தொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில், ட்விட்டரில் பதிவிட்டுள்ள டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், ஈரானில் ஸ்டார்லிங்க் செயற்கைகோள் மூலம் இலவச இணைய சேவையை வழங்கப்போவதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
from International https://ift.tt/9cKNlT5
via
