பொதுவாகவே அப்பாக்களின் செல்லப்பிள்ளைகளான dad's little prince என்று சொல்லிக்கொள்ளும் மகள்களுக்காக, சிலசமயங்களில் விசித்திரமான செயல்களை அப்பாக்கள் செய்வதுண்டு. அப்படித்தான், சீனாவில் லு(Lu) என்ற 39 வயது தந்தை ஒருவர், மகளுக்காகப் பழிவாங்குவதாக நினைத்து செய்த செயல், அவருக்கே கேடாய் முடிந்திருக்கிறது.
ஒருநாள் லு என்பவர் தன்னுடைய மகளுடன் நண்டு விற்பனை நிலையத்துக்குச் சென்றிருக்கிறார். அப்போது தன்னுடைய மகளை நண்டு ஒன்று கடித்திருக்கிறது. இதனைக் கண்ட லு, தன்னுடைய மகளுக்காக அந்த நண்டை பழிவாங்குவதாக எண்ணி, உயிரோடிருந்த அந்த நண்டை அப்படியே முழுவதுமாக விழுங்கியிருக்கிறார்.
இந்தச் சம்பவம் நடந்து சுமார் 2 மாதங்களுக்குப் பிறகு, திடீரென ஒருநாள் கடுமையான முதுகுவலி காரணமாக லு, மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். அங்கு மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்ததில், லு-வின் மார்பு, வயிறு, கல்லீரல் மற்றும் செரிமான அமைப்பில் நோயியல் மாற்றங்கள் இருப்பதைக் கண்டறிந்திருக்கின்றனர்.
பின்னர் அந்த மருத்துவமனையின் செரிமான அமைப்பு துறையின் இயக்குநர் ஒருவர், ``அசாதாரணமான அல்லது ஒவ்வாமையை உண்டாக்கக்கூடியதை சாப்பிட்டீர்களா?" என்று லு-விடம் கேட்டிருக்கிறார். அதற்கு அப்படியெல்லாம் ஒன்றும் சாப்பிடவில்லை என அவரிடம் லு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் லு-வின் மனைவி, அவர் நண்டு சாப்பிட்ட சம்பவத்தை மருத்துவர்களிடம் தெரிவித்துவிட்டார். அதன்பிறகு லு-வும், தான் செய்ததை மருத்துவர்களிடம் ஒப்புக்கொண்டுவிட்டார்.
பின்னர் அந்த மருத்துவர், ``உயிருள்ள நண்டை ஏன் சாப்பிட்டீர்கள்?" என லு-விடம் கேட்டிருக்கிறார். அதற்கு, ``ஒரு நண்டு என் மகளை கடித்துவிட்டது. அதனாலநான் அதை என் மகளுக்காகப் பழிவாங்க விரும்பினேன். அதனால்தான் அப்படிச் செய்தேன்" என லு பதிலளித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து மருத்துவர்கள் லு-வின் ரத்த மாதிரிகளைப் பரிசோதனை செய்ததில், நண்டு சாப்பிட்டதால் ஒட்டுண்ணிகளால் அவர் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. சிகிச்சைக்குப் பிறகு லு குணமடைந்து கடந்த திங்கள்கிழமை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
from International https://ift.tt/lEqnJtp
via
