குழந்தையைப் பெற்றுக் கொள்வது அவரவரின் தனிப்பட்ட விருப்பம். ஒரு தம்பதிக்கு எப்போது விருப்பம் இருக்கிறதோ, அப்போது அவர்கள் குழந்தையைப் பெற்றுக் கொள்கிறார்கள்.
ஆனால் திருமணமான ஒரு வருடத்திலேயே `வீட்ல விசேஷம் இல்லையா’ என மெதுவாகக் கேள்விகளை ஆரம்பிப்பார்கள். இது குடும்பங்களில் சகஜமாக நடப்பதுதானே என நினைக்கலாம்.

ஆனால் புதிதாகத் திருமணமான பெண்களிடம், உள்ளூர் அரசு ஊழியர்களே போன் செய்து, கருவுற்றிருக்கிறீர்களா எனக் கேட்டால் எப்படி இருக்கும்? இப்படியெல்லாம் யாரவது கேட்பார்களா என்கிறீர்களா?
ஆமாம்... சீனா, நான்ஜிங் நகர அரசின் மகளிர் சுகாதார சேவை உள்ளூர் அதிகாரிகள், புதிதாகத் திருமணமான பெண்ணிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டிருக்கின்றனர். அந்தப் பெண்ணிடம் பேசிய அரசு ஊழியர், ``புதுமண தம்பதிகள் ஒரு வருடத்திற்குள் கர்ப்பமாக வேண்டும் என அரசு விரும்புகிறது. அதைப் பரிசோதிக்க ஒவ்வொரு காலாண்டிலும் ஒரு தொலைபேசி அழைப்பை மேற்கொள்வதே எங்களின் இலக்கு’’ எனத் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தை அந்தப் பெண்ணுடன் பணிபுரியும் சக ஊழியர், சமூக வலைத்தளத்தில் பதிவிட, அதன் கீழ் வரிசையாக எனக்கும் இதுபோன்ற அழைப்புகள் வந்தன என கமென்டுகள் குவிந்துள்ளன. அதில் ஒரு பெண்ணிடம் பேசிய ஊழியர் ``உங்களுக்குத் திருமணமாகிவிட்டது, இன்னும் ஏன் கர்ப்பமாக வில்லை, குழந்தையைப் பெற்றுக் கொள்ள நேரம் எடுத்துக் கொள்ளுங்கள்'' எனக் கூறியுள்ளார்.
இந்தச் சம்பவம் பேசுபொருளாக உருவெடுக்கையில், அதிகாரிகள் அந்தப் பதிவை நீக்கியுள்ளனர். சீன அரசு புதுமண தம்பதிகள் ஒரு வருடத்திற்குள் குழந்தை பெற்றுக் கொள்வதில் ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டி வருகிறது போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.
from International https://ift.tt/frBcPdQ
via
