அமெரிக்க ஃபெடரல் வங்கியின் மாதாந்திர கூட்டம் அண்மையில் நடைபெற்றது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்த பிறகு கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலை அதிகரித்தது. மேலும் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் அமெரிக்க மக்களுக்கு அதிக அளவிலான நிதி உதவிகள் வழங்கப்பட்டன. அமெரிக்க தேர்தலை மனதில் வைத்து அதிக அளவான பணம் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டும் உள்ளது. இவையெல்லாம் சேர்த்து முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவில் பணவீக்கம் உயர்ந்தது.
தொடர்ந்து வட்டி உயர்வு..!
இதன் காரணமாக கடந்த எட்டு மாதங்களாக அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதங்களை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆரம்ப காலகட்டத்தில் மாதத்திற்கு 0.75% வட்டி விகிதம் உயர்த்தப்பட்டது. தற்போது ஒன்பதாவது முறையாக 0.25% வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது அமெரிக்காவில் வட்டி விகிதம் 5% ஆக உள்ளது.
அமெரிக்க ஃபெடரல் வங்கி பணவீக்க விகிதத்தை 2% என்ற அளவிற்கு கீழ் குறைப்பதை இலக்காக கொண்டுள்ளது. எட்டு முறை உயர்த்தப்பட்ட போதும் வட்டி விகிதங்கள் எதிர்பார்த்த அளவிற்கு குறையவில்லை. தற்போது பிப்ரவரி மாத நிலவரப்படி பணவீக்க விகிதம் 6% என்று அளவில் உள்ளது. இது ஃபெடரல் வங்கியின் இலக்கை விட மூன்று மடங்கு அதிகமாகும்.
ஆனால் அதிகரித்த வட்டி விகிதம் காரணமாக அமெரிக்க வங்கி துறை அதிக பாதிப்படைந்து வருகிறது. குறிப்பாக அமெரிக்காவின் முன்னணி வங்கிகளான சிலிகான் வேலி வங்கி, சிக்னேச்சர் வங்கி ஆகிய வங்கிகள் திவால் ஆகியது. இதன் காரணமாக ஃபெடரல் வங்கி திட்டமிட்டபடி வட்டி விகிதங்களை அதிகரிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. தற்போது வட்டி விகிதங்கள் மீண்டும் உயர்த்தப்பட்டதன் மூலம் அந்த எதிர்பார்ப்பிற்கு விடை அளிக்கப்பட்டுள்ளது.
ஃபெடரல் வங்கியின் கூட்டத்திற்கு பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த ஃபெடரல் வங்கியின் கவர்னர் ஜெரோம் பவல் அமெரிக்கா வங்கிகள் ஸ்திர தன்மையுடன் இருப்பதாகவும் தேவையான பணப்புழக்கம் அமெரிக்க வங்கிகளுக்கு கிடைப்பதற்கு ஃபெடரல் வங்கி எப்போதும் துணை நிற்கும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
தற்போது சந்தை வல்லுனர்களின் கணிப்பின்படி இன்னும் ஒரு முறை மட்டும் ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை 0.25% உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதன் பிறகு நீண்ட காலத்திற்கு வட்டி விகிதம் 5.25% நிர்ணயம் செய்யப்படும். பணவீக்க விகிதம் ஃபெடரல் வங்கி எதிர்பார்த்த அளவிற்கு குறைந்தால் மட்டுமே வட்டி விகிதம் மீண்டும் குறைக்கப்படும்.
பிரிட்டனிலும் கடன்களுக்கான வட்டி விகிதம் 0. 25% சென்ற வாரத்தில் உயர்த்தப்பட்டது. நமது நாட்டிலும் வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி உயர்த்தும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.
பண வீக்கத்திற்கு எதிரான போர் நீண்ட காலத்திற்கு இருக்கும் என்பதை தொடர்ந்து அதிகரிக்கும் வட்டி விகித உயர்வு நமக்கு உணர்த்துகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நமது பங்குச் சந்தையும் ஏற்றத்தை சந்திக்கவில்லை. பங்குச் சந்தைகளில் கொரோனா காலகட்டத்தில் வீட்டில் இருந்தபடியே வேலை செய்த காரணத்தினால் பலர் புதிய டீமேட் கணக்குகளை தொடங்கி தமது முதலீட்டை மேற்கொண்டனர்.

அவ்வாறு முதலீடு செய்தவர்களுக்கு முதலாண்டு மிகப்பெரிய லாபம் கிடைத்தாலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கடுமையான காலகட்டத்தை அவர்கள் பார்த்து வருகிறார்கள். இந்தக் காலகட்டங்களில் பங்குச் சந்தையில் ஈடுபட்ட பலர் பலத்த நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இதன் காரணமாக தமது முதலீடுகளை திரும்பப்பெற்று டீமேட் கணக்குகளை மூடி வரும் தனி நபர்களின் எண்ணிக்கை கடந்த சில மாதங்களாக அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. பண வீக்க பிரச்னைக்கு முடிவு கிடைக்காமல் இதே நிலைதான் சந்தையில் தொடரும் என்பதால் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்திருப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
from International https://ift.tt/MQBu72g
via
