ரஷ்யா-உக்ரைனுக்கிடையே கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக போர் நடந்துவருகிறது. இந்தப் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக வாக்னர் எனும் கூலிப்படைக் குழு செயல்பட்டது. இந்த நிலையில், சமீபகாலமாக வாக்னர் குழுவுக்கும், ரஷ்யாவுக்கும் மத்தியில் மோதல் வெடித்தது. இதற்கிடையே, `ரஷ்ய அதிபர் புதினின் ஆட்சியைக் கவிழ்ப்போம்' என வாக்னர் குழு சபதமேற்றிருந்தது. இதற்கு பதிலளித்த ரஷ்ய அதிபர் புதின், ``வாக்னர் குழுவின் செயல் முதுகில் குத்துவது போன்ற துரோகம். இதற்கு வாக்னர் குழுவுக்குக் கடுமையான தண்டனை கொடுக்கப்படும்" என எச்சரித்திருந்தார்.
இந்த நிலையில் வாக்னர் கூலிப்படையின் தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஜினுடன் ஏற்பட்ட சமாதான பேச்சுவார்த்தையின் காரணமாக வாக்னர் படை பின்வாங்கியிருக்கிறது. மேலும், ரஷ்ய தரப்பு, "யெவ்ஜெனி ரஷ்யாவிலிருந்து வெளியேற வேண்டும். அவர் வெளியேறினால் அவர்மீது எந்தக் குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படாது" எனத் தெரிவித்திருக்கிறது. இதனால் ரஷ்யாவிலிருந்து வெளியேறி பெலாரஸ் நாட்டுக்கு யெவ்ஜெனி ப்ரிகோஜின் செல்லத் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் ரஷ்யாவில் வெடிக்கவிருந்த உள்நாட்டுப் போர் தொடர்பான அச்சம் முடிவுக்கு வந்திருக்கிறது.
இந்த நிலையில், ரஷ்யாவுக்கு எதிரான வாக்னர் படையின் எழுச்சி குறித்து சீனா அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிவிப்பில், "எங்களது நட்பு அண்டை நாடாகவும், ஒரு புதிய அத்தியாயத்தின் கூட்டுறவுப் பங்காளியாகவும் இருக்கும் ரஷ்ய நாட்டின் தேசிய உறுதித்தன்மை, வளர்ச்சி மற்றும் செழிப்பைக் காப்பதில் ரஷ்யாவுடன் சீனா உறுதுணையாக நிற்கும்" என்று தெரிவித்திருக்கிறது. சீனாவின் இந்த அறிவிப்பு உலக அரசியலில் முக்கியமனதாகக் கருதப்படுகிறது.
from International https://ift.tt/SJs6BZx
via
