தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க்கில் நடந்த பிரிக்ஸ் (BRICS) மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜிங்பிங்-கும் நேற்று பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், லடாக்கின் கார்கில் பகுதிக்குச் சென்ற ராகுல் காந்தி, பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், ``நான் லடாக்கின் பான்காங் ஏரிக்குச் சென்றபோது, ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் இந்திய நிலம் சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதை உணர முடிந்தது. இந்தியாவின் நிலம் சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் பிரதமர் மோடி, நாடாளுமன்றத்தில் சீனா இந்தியாவின் ஓர் அங்குல நிலத்தைக்கூட அபகரிக்கவில்லை என அப்பட்டமாகப் பொய் சொல்கிறார். இது எனக்கு வருத்தமளிக்கிறது. ஆனால், சீனா ஆக்கிரமித்திருப்பது லடாக்கிலுள்ள ஒவ்வொரு மக்களுக்கும் தெரியும். சில மாதங்களுக்கு முன்பு, கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை நடந்தே சென்றோம், அது ‘பாரத் ஜோடோ யாத்திரை’ என்று அழைக்கப்பட்டது.
நாட்டில் பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ் பரப்பும் வெறுப்பு மற்றும் வன்முறைக்கு எதிராக நிற்பதே இதன் நோக்கமாக இருந்தது... யாத்திரை மூலம் இந்த நாட்டுக்கு, வெறுப்பு சந்தைக்கு எதிராக அன்புக் கடை திறக்கப்படுகிறது. கடந்த சில நாள்களாக அதன் பலனை நானே பார்க்க நேர்ந்தது. யாத்திரையின்போது, குளிர்கால பனி காரணமாக என்னால் லடாக்குக்கு வர முடியவில்லை. லடாக்கில் யாத்திரையை நடத்த வேண்டும் என்பது என் இதயத்திலிருந்தது, அதை இந்த முறை மோட்டார் சைக்கிளில் முன்னெடுத்துச் சென்றேன்.
மற்ற தலைவர்கள் தங்களின் 'மன் கி பாத்'தைச் செய்வதில் மும்முரமாக இருக்கிறார்கள். ஆனால் நான் மக்களின் 'மன் கி பாத்'தைக் கேட்க நினைத்தேன். இப்போது ஒரு விஷயத்தைத் தெளிவாக உணர்ந்துகொண்டேன். மகாத்மா காந்தி, மற்றும் காங்கிரஸின் சித்தாந்தம் லடாக்கின் ரத்தத்திலும், டி.என்.ஏ-விலும் இருக்கிறது" என்றார்.
இதற்குப் பதிலளிக்கும்விதமாக பா.ஜ.க மாநிலங்களவை எம்.பி-யும், அந்தக் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளருமான டாக்டர் சுதன்ஷு திரிவேதி, ``சீனாவுடனான காங்கிரஸின் உறவையும், எங்களின் உறவையும் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.
கடந்த 2020-ல் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சி மத்தியில் அமைந்ததும், சீனா ஒரு மோசமான தூதரக உறவில் பயணித்துக் கொண்டிருக்கிறது என்று தெரிவித்திருந்தார். ராகுல் காந்தி ஏன் சீனாவின்மீது இவ்வளவு அன்பினை வெளிப்படுத்துகிறார் என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. ராஜிவ் காந்தி அறக்கட்டளைக்கு பண உதவி கிடைத்ததாலா... ராகுல் காந்தி மக்கள் சொன்னதாகக் கூறுகிறார்.
யார் அந்த மக்கள்... டோக்லாம் மோதலின்போது சீனத் தூதருடன் அவர் இணைந்து உணவு சாப்பிட்டதை வெளியில் சொல்லவில்லை. ஆனால், சீனாவால் அவர்கள் உணவருந்திய படம் பகிரப்பட்டிருந்தது. தன்னுடைய காலத்தில் சீனாவுக்கு உணவும், உதவிகளும் அளிக்கப்பட்டிருக்கின்றன என்று நேருவே ஒரு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார். 1962-ம் ஆண்டு அரசுக்கு உதவியாக இருந்ததற்காக நேருவே ஆர்.எஸ்.எஸ்-ஸைப் பாராட்டியிருக்கிறார். அப்படியானால் அவர் பொய் சொல்கிறாரா... நீங்கள் பொய் சொல்கிறீர்களா?" எனத் தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
from International https://ift.tt/2R7vxCD
via
