இந்தியாவில் இருந்து கொண்டு கால் சென்டர் நடத்தி, வெளிநாடுகளில் இருப்பவர்களிடம் மோசடி செய்யும் சம்பவங்கள் அதிக அளவில் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துவருகிறது. மும்பையில் இது போன்ற மோசடிகள் இதற்கு முன்பும் நடந்துள்ளது. வருமான வரித்துறை அதிகாரிகள் என்றோ அல்லது வயாகரா மாத்திரை விற்பவர்கள் என்றோ கூறி அமெரிக்க பிரஜைகளை ஏமாற்றி பணம் சம்பாதிப்பது சர்வசாதாரணமாக நடந்து வருகிறது. அது போன்ற ஒரு கால் சென்டர் டெல்லி அருகில் உள்ள நொய்டாவில் நடப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே நொய்டா போலீஸார் அந்த கால் சென்டரில் அதிரடி ரெய்டு நடத்தினர்.

இதில் அமெரிக்கா பிரஜைகளிடம் அமெரிக்க சமூக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் போன்று பேசி மோசடி செய்து கொண்டிருந்தனர். அமெரிக்க பிரஜைகளுக்கு அவர்களின் வருமானம் அடிப்படையிலும், நலத்திட்டங்கள் வழங்கவும் 9 இலக்க சமூக பாதுகாப்பு எண் வழங்கப்படுகிறது. இதில் 4 லட்சம் அமெரிக்க பிரஜைகளின் சமூக பாதுகாப்பு எண்களை டார்க் வெப் மூலம் திருடி, அதில் உள்ளவர்களுக்கு கால் சென்டர் மூலம் போன் செய்து கோடிக்கணக்கில் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. கால் சென்டரில் பணியாற்றிய 84 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் இதற்கு முன்பு கால் சென்டரில் வேலை பார்த்து நல்ல அனுபவசாலிகள் ஆவர். அவர்கள் அமெரிக்க பிரஜைகளை மோசடி செய்கிறோம் என்று தெரிந்தே அதிக சம்பளத்திற்கு ஆசைப்பட்டு இந்த வேலையை செய்து வந்துள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. 150-க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்கள், 20 லட்சம் ரொக்க பண்ம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து நொய்டா போலீஸ் அதிகாரி ஹரீஷ் சந்தர், ``கால் சென்டரில் இருப்பவர்கள் முதலில் அமெரிக்க பிரஜைகளுக்கு வாய்ஸ் மெசேஜ் ஒன்றை அனுப்புவார்கள்.
அதில், சந்தேகப்படும் படியான நடவடிக்கைகள் காரணமாக உங்களது சமூக பாதுகாப்பு எண் சஸ்பெண்ட் செய்யப்படலாம் என்று குறிப்பிடப்பட்டு இருக்கும். மேலும் சஸ்பெண்ட் செய்யப்படாமல் இருக்க குறிப்பிட்ட போன் நம்பரை கொடுத்து அந்த நம்பருக்கு தொடர்பு கொள்ளும்படி குறிப்பிடப்பட்டு இருக்கும். அந்த நம்பருக்கு போன் செய்பவர்களிடம் கால் சென்டரில் பணியாற்றுபவர்கள் உங்கள் பைலை திறக்கிறேன் என்று சொல்லி அவர்களின் பெயர் மற்றும் ஜிப் எண்களை கேட்பது வழக்கம்.
சம்பந்தப்பட்ட நம்பர் இத்தகவல்களை கொடுத்துவிட்டால், உடனே உங்களது சமூக பாதுகாப்பு எண்ணை சஸ்பெண்ட் செய்வதற்காக ஆர்டர் வெளியிடப்பட இருக்கிறது என்று கூறி, சமூக பாதுகாப்பு எண்ணில் பணமோசடி, வாகன மோசடி தொடர்பாக தகவல்கள் இருக்கிறது என்று சொல்லி கால் சென்டர் ஊழியர் பயமுறுத்துவது வழக்கம். மேலும் வங்கி கணக்கும் முடக்கப்படும் அபாயம் இருக்கிறது.
எனவே வங்கியில் இருக்கும் பணத்தை கிரிப்டோ கரன்சிக்கு மாற்றி பாதுகாத்து வைத்துக்கொள்ளும்படி ஆலோசனை சொல்வது வழக்கம். இதற்காக ஒரு லிங்க் அனுப்புவதாகவும் கால் சென்டர் ஊழியர் கூறுவார். கால் சென்டர் ஊழியர்கள் அனுப்பும் லிங்க்கை அமெரிக்க பிரஜை கிளிக் செய்துவிட்டால் அவரது வங்கிக்கணக்கில் இருக்கும் பணம் முழுவதும் கால் சென்டர் ஊழியரின் வங்கிக்கணக்கிற்கு வந்துவிடும். கால் சென்டரை நடத்தி வந்த ஹர்சித் குமார், யோகேஷ் பண்டிட் ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர்.
கைது செய்யப்பட்ட 84 பேரில் 38 பேர் பெண்கள் ஆவர். தலைமறைவாக இருக்கும் இரண்டு பேரும் கடந்த 4 மாதத்திற்கு முன்புதான் இந்த கால் சென்டரை தொடங்கியுள்ளனர். நான்கு மாதத்தில் 50 கோடி ரூபாய் அளவுக்கு 600 அமெரிக்க பிரஜைகளிடமிருந்து மோசடி செய்துள்ளனர். தினமும் 40 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளனர்” என்று தெரிவித்தார்.
from International https://ift.tt/lFrsNtG
via
