உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர்ப் பதற்றம் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில், ரஷ்யா தன் படைகளில் ஒருப் பகுதியைத் திரும்பப் பெற்றுக்கொண்டதாகவும், போர் செய்வதற்கு விரும்பவில்லை என்றும் நேற்று தகவல் வெளியானது. ஆனால், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்த அறிவிப்பை இன்னும் தங்கள் தரப்பு உறுதிப்படுத்தவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய அவர், ``உக்ரைனின் எல்லைகளுக்கு அருகே தனது ராணுவ வீரர்களில் ஒருப் பகுதியினரைத் திரும்பப் பெறுவதாக ரஷ்யா தெரிவித்திருக்கிறது.
ஆனால், ரஷ்யாவின் இந்த அறிவிப்பை அமெரிக்கா இன்னும் சரிபார்க்கவில்லை. உக்ரைனில் உள்ள அமெரிக்கர்களை ரஷ்யா குறிவைத்தால், வாஷிங்க்டன் தீர்க்கமாகப் பதிலடி கொடுக்க தயாராக இருக்கிறது. எங்களால் அது சாத்தியம்.
ரஷ்ய ராணுவப் பிரிவுகள் தங்கள் சொந்த தளங்களுக்குத் திரும்புகின்றன என்பதை நாங்கள் இன்னும் சரிபார்க்கவில்லை. உண்மையில் எங்கள் ஆய்வாளர்கள் இன்னும் உக்ரைன் எல்லையின் சூழல் மிகவும் அச்சுறுத்தும் நிலையில் இருப்பதாகக் குறிப்பிடுகின்றனர்.
இப்போது ஒரு லட்சத்து ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் உக்ரைன் மற்றும் பெலாரஸைச் சுற்றி வருகின்றனர். எனவே உக்ரைனுக்கு எதிரான படையெடுப்பு இன்னும் சாத்தியமாகவே உள்ளது. இருப்பினும், வரும் நாள்களில் அல்லது வாரங்களில் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்தால் அது மிகப்பெரிய சர்வதேச கண்டனத்தைச் சந்திக்கும். ஏனென்றால், ஏற்கெனவே ரஷ்யா தேவையற்ற மரணத்தையும் அழிவையும் தேர்ந்தெடுத்ததை உலகம் மறந்துவிடாது.
எங்கள் நிறுவனங்கள் அல்லது முக்கியமான உள்கட்டமைப்புகளுக்கு எதிரான சீர்குலைக்கும் சைபர் தாக்குதல்கள் போன்ற தேவையற்ற வழிமுறைகள் மூலம் அமெரிக்கா அல்லது எங்கள் நட்பு நாடுகளை ரஷ்யா தாக்கினால், நாங்கள் பதிலடி கொடுக்கத் தயாராக இருக்கிறோம்" என்றார்.
from International https://ift.tt/7giRhrt
via
